இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் திமுக தங்களுடைய கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முதற்கட்டமாக ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வருகிறது. அதேபோல் திமுக பணிக்குழு உறுப்பினர்களுடன் திமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைகளைத் தொடங்கக் காத்திருக்கிறது. இந்தநிலையில் சேலம் வந்திருந்த கே.பி. முனுசாமியைச் சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள், ‘அதிமுக கூட்டணி பற்றி இதுவரை தகவல்கள் வெளிவரவில்லை' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்பு அதிமுகவின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி நல்ல அரசியல் அனுபவம் வாய்ந்தவராக இருக்கிறார். நிச்சயமாக ஏற்கனவே அவர் கூறியதுபோல மெகா கூட்டணியை அமைப்பார். அமைத்து தேர்தல் களத்தில் நிற்பார். நின்று வெல்வார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் 'திமுகவினர் தொகுதி பங்கீடு வரை சென்றுவிட்டனர். ஆனால் இதுவரை அதிமுக கூட்டணியில் யார் இருக்கிறார்கள் என்றுகூட தெரியவில்லை. எப்படி மெகா கூட்டணி சாத்தியம்' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''அதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம். எப்பொழுது யார் யார் வாயிலிருந்து வார்த்தைகளை பிடுங்கலாம் என்பதற்காக கேள்விகளை கேட்பீர்கள். எந்தெந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமோ அதற்கு மட்டும் பதில் சொல்லி, தேவையில்லாதவைகளுக்கு பதில் சொல்லாமல் இறுதியாக நடவடிக்கையின் வாயிலாக ஊடகங்களுக்கு தெரியப்படுத்துவோம்'' என்றார்.
டி.டி.வி. தினகரன் எடப்பாடி பழனிசாமியை துரோகி என விமர்சித்தது குறித்த கேள்விக்கு, ''ஒரு தரம் தாழ்ந்த மனிதரைப் பற்றி விமர்சனம் செய்ய நான் விரும்பவில்லை. ஓபிஎஸ் இரண்டு முறை முதலமைச்சராக இருந்தவர். ஜெயலலிதா போட்ட பிச்சையில் பொது வாழ்க்கையில் இந்த இடத்திற்கு வந்தவர். இந்த இடத்திற்கு வந்த பின்பும் அவருடைய சொந்த புத்தியில் இரட்டை இலை எங்களுக்கு வரும் என கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார். நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பும் உளறிக்கொண்டிருக்கிறார் ஓபிஎஸ்'' என்றார்.