இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருவண்ணாமலை மாவட்டத்தில் துறை சார்பில் அக்டோபர் 27 ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அண்ணாமலையார் கோவிலில் ஆய்வு செய்தவர் கரோனாவால் நிறுத்திவைக்கப்பட்ட தங்கத்தேரை மீண்டும் இழுத்துத் துவக்கி வைத்தார். தொடர்ந்து ஈசான்யத்தில் அமைக்கப்பட்ட யாத்ரிநிவாஸ்சை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கார்த்திகை தீபத்திருவிழா ஆலோசனைக் கூட்டம், கோவில் நிர்வாகம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது, ''அண்ணாமலையார் கோவிலுக்கு யானை தேவை, கோவில் இடங்களில் உள்ள கடைகளின் வாடகையைக் குறைக்க வேண்டும், ராஜகோபுரம் முன்பு காலியாகவுள்ள இடத்தில் கடைகள் கட்டவேண்டும், முக்கிய பிரமுகர்களுக்கான பார்க்கிங் வசதியை ஏற்படுத்தவேண்டும், புளியோதரை அல்லது கற்கண்டு கோவில் பிரசாதமாகப் பக்தர்களுக்குக் கட்டணமில்லாமல் வழங்கவேண்டும், தினமும் காலை, இரவு நேரங்களில் மாடவீதியில் பக்தி பாடல்கள் ஒளிபரப்ப வேண்டும், கோவிலுக்குள் பொதுக்கழிப்பிடம் அமைக்க வேண்டும், பருவதமலை வளர்ச்சியடைய துறை சார்பில் திட்டங்கள் உருவாக்க வேண்டும், இந்து சமய கலைகள் கற்கப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும், ஐயங்குளத்தை தூர்வார வேண்டும்'' என 10 கோரிக்கைகளை வைத்தார்.
இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசும்போது, ''இங்குக் கோரிக்கை வைக்கும் முன்பே 70 விதமாகக் கோரிக்கையை முன்பே கடிதமாக அமைச்சர் வேலு தந்துள்ளார். துறை அதிகாரிகளிடம் விவாதித்துச் செய்ய முடிந்தவற்றை விரைந்து செயல்படுத்துவோம்'' என வாக்குறுதி தந்தார்.
முன்னதாக கிரிவலப்பாதையில் உள்ள ஆணாய்பிறந்தான், அத்தியந்தல், அடிஅண்ணாமலை, வேங்கிக்கால் ஊராட்சிகள் பௌர்ணமி, கார்த்திகை தீபத்திருவிழா, சித்திரை திருவிழாவின்போது அதிகளவு செலவு செய்கிறோம், எங்களிடம் நிதியில்லை என அந்த ஊராட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் திருவண்ணாமலை நகராட்சி சார்பில் பக்தர்களுக்காகத் திருவிழா உட்பட மற்ற நாட்களில் செலவிடப்படும் தொகையினை அறநிலையத்துறை 70 சதவீதம் மட்டுமே திருப்பி தருகிறது. நீண்ட கால கோரிக்கையான 100 சதவீதம் திருப்பி தரவேண்டும் எனக் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதனை உடனே ஒப்புக்கொண்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும், துறை செயலாளர் குமரகுருபரனும் நிறைவேற்றுகிறோம், விரைவில் அரசாணை வெளியிடப்படும் என அறிவித்தார்கள்.