செல்போனில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுவோர்தான் அதிகளவில் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த 2004ம் ஆண்டில் டிசம்பர் 26ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களை சுனாமி தாக்கியது. அதன் கோரத்தாண்டவத்திற்கு 8000க்கும் மேற்பட்டோர் பலியாயினர். உண்மையில், இயற்கை சீற்றத்தால் பலியாவோரின் எண்ணிக்கையைக் காட்டிலும் தமிழ்நாட்டில் தினம் தினம் சாலை விபத்தில் உயிரி-ழப்பவர்களே அதிகம். ஆண்டுக்கு சராசரியாக தமிழகத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலை விபத்தில் பலியாகின்றனர்.
கடந்த 2017ம் ஆண்டில் மட்டும் தமிழகம் முழுவதும் நடந்த சாலை விபத்துகளில் 16157 பேர் பலியாகியுள்ளதாக கூறுகிறது, போக்குவரத்துறை புள்ளி விவரம். அதேநேரம் தொடர் விழிப்புணர்வு பரப்புரைகளால் இந்த ஆண்டு விபத்து மரணங்கள் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் நடப்பு ஆண்டில் ஜுன் மாதம் வரை 6650 பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் விபத்து மரணம் 20 விழுக்காடு வரை குறைந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள போக்குவரத்துத்துறை (ஆர்டிஓ) அதிகாரிகள் காவல்துறையினருடன் இணைந்து சாலை விபத்துகளை கட்டுப்படுத்துவதில் சில நுட்பமான அணுகுமுறைகளைக் கையாண்டு வருகின்றனர். குறிப்பாக சேலம் மேற்கு ஆர்டிஓ தாமோதரன், கிழக்கு ஆர்டிஓ கதிரவன் ஆகியோர் சாலை விபத்துகள் குறித்த ஆய்வுகளை தீவிரமாக மேற்கொண்டு வந்ததில் சில தரவுகளை சேகரித்துள்ளனர்.
''சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் 2018, ஜூன் மாதம் வரை சாலை விபத்து மரணங்களை 45 விழுக்காடு வரை குறைத்து இருக்கிறோம். ஓட்டுநர் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க வரும்போதே அவர்களுக்கு சாலை விதிகள் குறித்து முழுமையாக விழிப்புணர்வு பயிற்சி அளிக்கிறோம்.
பொதுமக்கள் கூடும் இடங்கள், முக்கிய சாலை சந்திப்புகளில் வீதி நாடகக் கலைஞர்கள் மூலம் ஹெல்மெட் அணிவதன் அவசியம், கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிவதன் கட்டாயம், எல்லாவற்றுக்கும்மேலாக மது அருந்திவிட்டோ, செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறோம். இதனால்தான் சாலை விபத்து மரணங்கள் குறைந்திருப்பதாக கருதுகிறோம்.
அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களைக் கண்டறிந்து, அங்கெல்லாம் உயர்மட்டப் பாலங்கள் கட்டவும் பரிந்துரை செய்யப்படுகிறது. கிழக்கு ஆர்டிஓ எல்லைக்குள் மின்னாம்பள்ளி சந்திப்பு, ராமலிங்கபுரம் சந்திப்பு, ராயல் பார்க் பள்ளி சந்திப்பு, சன்னியாசிகுண்டு சந்திப்பு, பெருமாள் கோயில் மேடு சந்திப்பு, மாசிநாயக்கன்பட்டி ஆகிய ஆறு இடங்கள் அபாயகரமான பகுதிகளாக கண்டறியப்பட்டு, அங்கெல்லாம் பாலம் கட்ட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது,'' என்கிறார் சேலம் கிழக்கு ஆர்டிஓ கதிரவன்.
கர்நாடகாவில் வாகன ஓட்டிகளிடம் எமதர்மன், சித்ரகுப்தன் வேடமணிந்து சாலை விதிகளை பரப்புரை செய்யும் வீடியோ பதிவு வாட்ஸ்அப்பில் அண்மையில் 'வைரல்' ஆக பரவியது. உண்மையில், சேலம் மாவட்ட போக்குவரத்துத்துறையினர் ஓராண்டுக்கும் மேலாக இத்தகைய ஜனரஞ்சகமான உத்தியில்தான் சாலை விதிகள் குறித்து பரப்புரை செய்து வருகின்றனர். எமதர்மன் வேடமிட்டு கையில் பாசக்கயிறுடன் சென்று விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை மடக்கி விழிப்புணர்வு பரப்புரை பணிகளை சேலம் ஆர்டிஓ அதிகாரிகள் நீண்ட காலமாகவே செய்து வருகின்றனர்.
கிழக்கு ஆர்டிஓ எல்லையில் மட்டும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சாலை விதிகளை மீறிய 3364 இருசக்கர வாகன ஓட்டிகளின் லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளன. இவர்களில் 99 பேரின் லைசென்ஸ் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. நாட்டின் எந்த மூலையிலும் இனி அவர்களால் லைசென்ஸ் பெற முடியாது.
''அதிகளவிலான சாலை விபத்து மரணங்கள், செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டும்போதுதான் நிகழ்ந்துள்ளன. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் என இருதரப்புக்கும் இது பொருந்தும். டீன் ஏஜ் முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் அதிகளவில் சாலை விபத்துகளில் பலியாகின்றனர்,'' என கையில் ஏகப்பட்ட தரவுகளை வைத்துக்கொண்டு பேசுகிறார் சேலம் மேற்கு ஆர்டிஓ தாமோதரன்.
கடந்த 2017ம் ஆண்டில் சேலம் மாவட்டத்தில் சாலை விபத்துகளில் 820 பேர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் செல்லும்போது ஹெல்மெட் அணியாததால் தலைக்காயம் ஏற்பட்டு பலியானவர்கள் 330 பேர். ஹெல்மெட் அணிந்திருந்தும் 27 பேர் தலையில் அடிபட்டு இறந்துள்ளனர்.
இப்படி ஒரு தரவு நம்முன் வைக்கப்படும்போது இயல்பாகவே ஒரு சந்தேகம் எழக்கூடும். அதாவது, ஹெல்மெட் போட்டிருந்தாலும் விபத்தில் மரணம் நிகழத்தானே செய்கிறது என்ற கேள்வி எழலாம். ஒன்று, அந்த ஹெல்மெட் தரமானவையாக இருந்திருக்காது. இரண்டாவது, ஹெல்மெட் அணிந்தவர்கள் கழுத்தைச் சுற்றிலும் அதன் பெல்ட்டை 'லாக்' செய்யாமல் இருந்திருக்கக் கூடும். எது எப்படியாயினும், ஹெல்மெட் அணிந்தவர்களின் இறப்புடன் ஒப்பிடுகையில் அதை அணியாமல் தலைக்காயம் ஏற்பட்டு இறந்தவர்களே அதிகம் என்பதை வாகன ஓட்டிகள் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.
அதேபோல் காரில் செல்லும்போது சீட் பெல்ட் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். அப்படி அணிந்திருந்தும் சாலை விபத்தில் சிக்கியதில் 4 பேர் இறந்துள்ளனர். அதேநேரம், சீட் பெல்ட் அணியாதவர்கள் 27 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
சாலை விபத்துகளில் ஏற்படும் மரணங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து சேலம் மேற்கு ஆர்டிஓ தாமோதரன் நம்மிடம் விரிவாக பேசினார்.
''சேலம் மாவட்டம் முழுவதும் அடிக்கடி விபத்து நிகழக்கூடிய 108 இடங்களை 'பிளாக் ஸ்பாட்'களாக கண்டறிந்து இருக்கிறோம். அந்த இடங்களில் எல்லாம் சாலைகளில் இரவில் மினுங்கும் விளக்குகள், சிவப்பு நிற ஒளிரும் ஸ்டிக்கர்கள், ஒளிரும் கற்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. சாலையின் அகலத்தைக் குறைப்பதற்காக தடுப்புகளும் வைத்துள்ளோம். இதுபோன்ற பணிகளுக்காக அரசு ரூ.2.80 கோடி ஒதுக்கியுள்ளது.
சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்துவதில் போக்குவரத்துத்துறை, காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை மட்டுமின்றி வாகன ஓட்டிகளுக்கும் கூடுதல் பொறுப்பு இருக்கிறது. அதனால் அவர்களை நோக்கி நாங்கள் தொடர்ந்து விழிப்புணர்வு பரப்புகளை செய்து வருகிறோம். பொதுமக்கள் கூடும் இடங்களில் எல்லாம் டிஜிட்டல் திரை மூலம் ஆவணப்படங்கள்¢, குறும்படங்கள் வாயிலாகவும் தொடர்ந்து பரப்புரை செய்கிறோம். இதுமட்டுமின்றி, வாகன ஓட்டுநர்களுக்கென பிரத்யேகமாக மருத்துவ முகாம்கூட நடத்தி வருகிறோம்.
சாலை விதிகளை மீறியதாக மேற்கு ஆர்டிஓ எல்லையில் மட்டும் 3800 பேரின் லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளது. இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட்டை முறையாக அணிவது, கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிவது, அதிவேகத்தைத் தவிர்த்தல் போன்ற அடிப்படை விதிகளை பின்பற்றினாலே விபத்து மரணங்களை பெருமளவு கட்டுப்படுத்தி விடலாம்,'' என்கிறார் ஆர்டிஓ தாமோதரன்.