அறுவடைக்கு தயாராக இருக்கின்ற பல காய்கறிகள், பழங்கள், பூக்கள் அறுவடை செய்து என்ன செய்வதென்று தெரியாமல் விவசாயிகள் முடங்கிப்போய் இருக்கிறார்கள்.
கறந்த பாலையும் விற்க முடியாமல் பால் உற்பத்தியாளர்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள். அத்தியாவசிய பொருட்கள் எப்போதும் போல் கிடைக்குமென்று அரசு அறிவித்திருந்தாலும் அத்தியாவசிய பொருட்களை தேவையான இடங்களுக்கு அனுப்ப முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று வேதனையை தெரிவித்துள்ளார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன். இது குறித்த அவரது அறிக்கையில் மேலும்,
’’தினசரி உற்பத்தியாகின்ற கோடிக்கணக்கான முட்டைகளும் நாமக்கல்லில் தேங்கி கிடக்கிறது. சரியான வழிமுறைகளை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். காவல்துறைக்கு தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். தினசரி கோடிக்கணக்கில் வியாபாரமாகின்ற மல்லிகை, செவ்வந்தி, ரோஜா போன்ற மலர்கள் செடிகளிலேயே வாடி கொண்டிருக்கின்றன.
ஊரடங்கு உத்தரவுக்கு முன் பறிக்கப்பட்ட மலர்கள் ஆங்காங்கே மண்டிகளில் அழுகிப்போய் கிடக்கிறது. தோட்டத்தில் ஒரு கிலோ தக்காளியை 10 ரூபாய்க்குதான் வாங்குகிறார்கள். கோயம்பேடு போன்ற சந்தைகளில் வரத்து குறைவாக இருக்கிறது என்று காரணம் காட்டி ஒரு கிலோ 60 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
மாட்டினுடைய மடிகளிலே பாலை விட முடியாது. கன்றுக்குட்டிகளுக்கும் ஒரு அளவுக்கு மேல் தர முடியாது என்ற நிலையில் பாலை கறந்து தரையிலே ஊற்றுகின்ற அவலம் அரங்கேறுகிறது. அரசும், தனியார் நிறுவனங்களும் உற்பத்தியாகின்ற பாலை கொள்முதல் செய்ய முடியும். குளிரூட்டும் நிலையங்களில் வைக்க முடியும். பால் பவுடர், வெண்ணெய் கட்டிகள் போன்ற பொருட்களை உற்பத்தி செய்து இருப்பில் வைத்துக்கொள்ள முடியும்.
அரசினுடைய வழிகாட்டுதல் நடைமுறைகள் காவல்துறை அதிகாரிகளுக்கு சேராத காரணத்தினால் ஆங்காங்கே காய்கறி வண்டிகள் தடுக்கப்படுகின்றன. இதற்கான தீர்வை அரசு உடனடியாக காணவில்லை என்று சொன்னால் வறட்சியிலே தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளை விட இப்போது தற்கொலை செய்து கொள்பவர்கள் அதிகமாவார்கள்.
தமிழகத்திலே உற்பத்தியாகின்ற காய்கறிகள், மலர்கள், முட்டை போன்ற பொருட்கள் அதிகமாக பக்கத்தில் இருக்கின்ற கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்வது வழக்கம். மற்ற மாநிலங்களுக்கு இவற்றை அனுமதிக்கவில்லை என்று சொன்னால் நாம் எதிர்பார்க்கும் அனைத்து விபரீதங்களும் நடக்கும். அதேபோல பக்கத்து மாநிலங்களில் அத்தியாவசிய பொருட்களுக்கான பற்றாக்குறையும் நிலவும். அதனால் அத்தியாவசிய பொருட்களுக்காக மாநில எல்லைகள் பாதுகாப்பாக திறக்கப்பட வேண்டும். அதன் மூலம் கொரோனா தொற்று எல்லை வழியாக பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள முடியும்.
நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்பட்டால் விவசாயிகள் கடன் வாங்கி விவசாயம் செய்த அத்தனை பணமும் வீணாகப்போகும். கடனை திருப்பி கட்ட முடியாது. இந்தியா முழுவதும் விவசாயிகள் வாங்கி இருக்கின்ற கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.’’என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.