ஈரோடு மாநகர் பகுதியில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பல்வேறு இடங்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகன ஓட்டிகள் செயல்படுவதால் விபத்துகளும் ஏற்படுகிறது.
இதை தடுக்கவும், கண்காணிக்கவும் ஈரோடு தெற்கு மற்றும் வடக்கு போக்குவரத்து போலீசார் மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையின் போது வாகன விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முழுவதும் ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வந்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் அதிவேகமாக வந்த ஒருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 10 பேரின் டிரைவிங் லைசென்ஸை ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு போக்குவரத்து போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். மேலும் அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.