தூத்துக்குடி நீராவி என்ற கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் தென் மாவட்டங்களில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். தமிழகம் மட்டுமில்லாமல் கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த, 2018- ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் என்ற பகுதியில் உள்ள விவசாயி சக்திவேல் என்பவரை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியதாக நீராவி முருகன் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. அந்த வழக்கின் அடிப்படையில் ஈரோடு காவல்துறையினர் தனிப்படை ஒன்றை அமைத்து மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நீராவி முருகனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நீராவி முருகன் தூத்துக்குடி அருகே உள்ள வள்ளியூர் பகுதிக்கு அடிக்கடி சென்று வருவதாக தனிப்படை காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஈரோடு மாவட்ட மதுவிலக்கு துணை சூப்பிரண்டு ரமேஷ் தலைமையிலான காவல்துறையினர் மாறு வேடத்தில் வள்ளியூர் பகுதியை கண்காணித்து வந்தனர்.
அந்த பகுதியை தொடர்ந்து கண்காணித்து வந்த காவல்துறையினர் நேற்று முன்தினம் (20.12.2019) இரவு அந்தப் பகுதிக்கு நீராவி முருகன் தனது கூட்டத்தோடு வந்துள்ளார். இதை அறிந்த தனிப்படை போலீசார் நீராவி முருகன் வந்த வாகனத்தை நிறுத்துமாறு கூறியுள்ளனர். போலீசார் தங்களை சுற்றி வளைத்ததைத் தெரிந்துக் கொண்ட நீராவி முருகன் கூட்டம் வாகனத்தை போலீஸார் மீது ஏற்ற வேகமாக வந்துள்ளனர்.
இதனையடுத்து டிஎஸ்பி ரமேஷ் தலைமையிலான காவல்துறையினர் குழு நீராவி முருகன் கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் யாருக்கும் காயம் இல்லை. அந்த நேரத்தில் நீராவி முருகன் உட்பட 3 பேரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளது காவல்துறை. பிறகு அவர்களை நேற்று (21.12.2019) ஈரோடு கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த நீராவி முருகன் மீது ஈரோடு, திருப்பூர் ,சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 30 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றனர்.