ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே, தீபாவளி நாளன்று கணவன், மனைவி இருவரும் அரிவாளால் கொடூரமான முறையில் வெட்டி கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு மாவட்டம், சிட்டபுள்ளாபாளையம் என்ற கிராமத்தில் வசித்து வந்தார் 57 வயதான ராமசாமி என்ற விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மனைவி 47 வயது அருக்காணி. இவர்களது மகள் மேனகா, மேனகாவின் கணவர் பெருமாள். இவர்களுக்குப் பைரவ மூர்த்தி என்கிற மகன் உள்ளனர்.
தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட மகள் மேனகா, சிட்டபுள்ளாபாளையத்தில் உள்ள தாய் வீட்டுக்குக் கணவர் மற்றும் மகனுடன் வந்துள்ளார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த மதுசூதனன் என்கிற 20 வயது இளைஞர், தனது பிறந்தநாளைக் கொண்டாட நண்பர்களுடன் சாலையில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அந்த வழியாக வந்த மேனகாவை போதை தலைக்கேறிய இளைஞர்கள் கிண்டல் செய்துள்ளனர்.
இதுகுறித்து மேனகாவின் கணவர் பெருமாள், கிண்டலில் ஈடுபட்ட இளைஞர்களை தட்டிக்கேட்டுள்ளார். இதனால், இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மதுசூதனின் நண்பர்கள் பெருமாளையும், மேனகாவையும் தாக்கினார்கள். இந்தத் தகராறு குறித்து தகவல் அறிந்துவந்த அப்பகுதியினர், இருதரப்பினரையும் அப்போதைக்கு சமாதானம் செய்தனர்.
இந்த நிலையில், அந்த இளைஞர்களின் தாக்குதலில் காயமடைந்த மேனகாவும், அவரது கணவர் பெருமாளும் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைபெற சென்றுவிட்டனர். ராமசாமியும், அருக்காணியும் தங்களது வீட்டில் பேரன் பைரவ மூர்த்தியைக் கட்டிலில் படுக்கவைத்துவிட்டு, அருகிலேயே ஆளுக்கொரு பாயில் தூங்கிக்கொண்டிருந்தனர்.
நள்ளிரவு 12 மணி அளவில் மதுசூதனின் நண்பர்கள் 24 வயது கிருபா சங்கர், 23 வயது சூர்யா, சூர்யாவின் தந்தை சாமிநாதன் ஆகிய மூவரும் ராமசாமியின் வீட்டுக்குள் நுழைந்து, தூங்கிக்கொண்டிருந்த ராமசாயின் கழுத்தை அரிவாளால் வெட்டியுள்ளனர். வெட்டுப்பட்ட ராமசாமியின் அலறல் கேட்டு, கண்விழித்த அருக்காணியையும், அரிவாளால் வெட்டி சாய்த்துவிட்டு மூவரும் தப்பி ஓடியுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு கண்விழித்த பேரன் பைரவமூர்த்தியின் கண்முன்னே தாத்தாவும், பாட்டியும், வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடிப்பதைப் பார்த்துச் செய்வதறியாது பயந்து அழுதுள்ளான்.
சிறிது நேரத்தில், சுதாரித்துக் கொண்டு, கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருந்த தனது அம்மா மேனகா, அப்பா பெருமாள் மற்றும் மாமா யுவராஜ், ஆகியோருக்கு செல்ஃபோனில் தகவல் தெரிவித்துள்ளான் சிறுவன். இது குறித்து மேனகா, கொடுமுடி போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். அந்தத் தகவலின் பேரில் கொடுமுடி இன்ஸ்பெக்டர் முருகன், பெருந்துறை டி.எஸ்.பி செல்வராஜ், மாவட்ட எஸ்.பி.தங்கதுரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
கொலைசெய்யப்பட்ட ராமசாமி, அருக்காணி ஆகியோரின் உடல் கிடந்த இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், பேரன் பைரவமூர்த்தி கூறிய தகவலின் பேரில், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, மேனாகாவிடம் ரகளையில் ஈடுபட்ட மதுசூதனன், மற்றும் அதே ஊரைச் சேர்ந்த சீவாநந்தன், கார்த்தி, ஜீவாநந்தம், நவீன் ஆகிய 5 பேர்களையும் மடக்கிப் பிடித்து விசாரித்ததில், கணவன் மனைவி இருவரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடிய சூர்யா, சாமிநாதன், கிருபாசங்கர் ஆகிய 8 பேர்களைக் கைது செய்ததோடு பாலியல் சீண்டல், தகறாறு, எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், கொலை என இரண்டு வழக்காகவும் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் மற்றும் அருந்ததிய இளைஞர் பேரவை ஒருங்கினைப்பாளர் வடிவேல் ராமன் மற்றும் சில நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட காவல் துறை எஸ்.பி தங்கதுரை இருவரையும் 16ஆம் தேதி நேரில் சந்தித்து, கொலை செய்யப்பட்ட குடும்பத்திற்கு எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டப் பிரிவின் படி, 25 லட்சம் ரூபாய் அரசு நிவாரண நிதி உதவியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் எனத் தனியாக மனு கொடுத்ததோடு, சட்ட விளக்கங்களையும் கலெக்டர், எஸ்.பி. யிடம் நேரில் விளக்கினார் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன்.
அதனைத் தொடர்ந்து உறுதியாகச் செய்வதாக அதிகாரிகள் கூறினார்கள். இதைக் கால தாமதம் இல்லாமல் மிக விரைவாகச் செயல்படுத்தியுள்ளார் ஈரோடு மாவட்ட இளம் எஸ்.பி.யான தங்கதுரை. இன்று 17.11.2020 காலை மாவட்ட எஸ்.பி தங்கதுரை, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி.வாணிலட்சுமி ஜெகதாம்பாள், பெருந்துறை டி.எஸ்.பி திரு. செல்வராசு மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அனைவரும் படுகொலை செய்யப்பட்ட ராமசாமி வீட்டிற்கு நேரில் சென்று, வாரிசுதாரர்களான ஒரு மகள் இரண்டு மகன் என மூன்று பேருக்கு, அரசின் முதற்கட்ட நிவாரணத் தொகையாக ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2.75 லட்சம் என மொத்தம் ரூ.8.25 லட்சம் வழங்கினார்கள்.
மேலும், மூன்றாவது மகனான பூபதி என்பவருக்கு அரசு வேலை வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணியானை கிடைக்கும் என அந்தக் குடும்பத்திற்கு நம்பிக்கை கொடுத்தனர்.
போதையால் பெண்ணிடம் தகராறு செய்ததன்மூலம் கொல்லப்பட்ட அப்பாவியின் குடும்பத்திற்குத் தகுந்த நேரத்தில் துணை நின்று, சட்டப்படி உதவி பெறுவதற்கு முதல் முயற்சி எடுத்த மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகனும், சட்ட நடவடிக்கையை வேகமாகச் செயல்படுத்திய இளம் எஸ்.பி. தங்கதுரையும் பாராட்டுக்குரியவர்கள் என அருந்ததியின இளைஞர் பேரவை வடிவேல் ராமன் கூறியுள்ளார்.