பிரபலமான மாட்டுச் சந்தைகளில் ஒன்று ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை. ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில், இந்த மாட்டுச் சந்தை கூடும். ஈரோடு, கரூர், திருப்பூர், நாமக்கல், கோவை போன்ற மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் மாடு வளர்ப்போர் தங்கள் மாடுகளை விற்பனைக்காக இந்தச் சந்தைக்குக் கொண்டு வருவார்கள்.
இந்த மாடுகளை வாங்க தமிழகம் மட்டும் இல்லாமல் ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் இங்கு வந்து மாடுகளை விலைக்கு வாங்கிச் செல்வார்கள். கடந்த சில மாதங்களாக கரோனா வைரஸ் பரவலால் போடப்பட்ட பொது முடக்கம், ஊரடங்கு போன்ற காரணங்களால் மாட்டுச் சந்தை செயல்படாமல் இருந்தது.
மீண்டும் சென்ற மாதம் முதல் மாட்டுச் சந்தை தொடங்கப்பட்டாலும் விற்பனை அவ்வளவாக இல்லை. ஆனால் 12 ஆம் தேதி வியாழக்கிழமை இந்தச் சந்தைக்கு நூற்றுக்கணக்கான மாடுகளை வியாபாரிகள் விற்பனைக்காகக் கொண்டு வந்தனர். அதை வாங்குவதற்காக சில மாநிலங்களில் இருந்து வந்த வியாபாரிகள் மாடுகளை வாங்கிச் சென்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி மாடு வியாபாரம் இந்தச் சந்தையில் சூடு பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.