ஈரோடு மாவட்டத்தில் 10 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார் காவல்துறையை தொடர்பு கொண்ட மர்ம நபர். தீபாவளி நேரம் மக்கள் அதிக அளவில் கூடுவதால் ஈரோடு காவல்துறையும் ஈரோடும் பரபரப்பாகியது.
சென்னையில் உள்ள ரயில்வே தலைமை அலுவலகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு தொலைப்பேசி அழைப்பு ஒன்று வந்திருக்கிறது. அந்தத் தொலைப்பேசியில் பேசிய நபர், தன்னுடைய பெயர் அப்துல்கரீம் எனவும் ஈரோடு ரயில்வே ஸ்டேசன் அருகில் உள்ள பெட்ரோல் பங்க், பஸ் ஸ்டாண்டு, மணிக்கூண்டு, ரயில்வே ஸ்டேசன் என மக்கள் நடமாட்டம் அதிக உள்ள பகுதிகளில் 10 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
மேலும், இந்தத் திட்டத்தை நிறைவேற்ற என்னுடன் சேர்த்து 10 நபர்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சுற்றிக்கொண்டுள்ளோம், குண்டு வெடித்தால் பல உயிரிழப்புகள் ஏற்படும். உங்களால் முடிந்தால் காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்று கூறி தொலைப்பேசி இணைப்பை துண்டித்திருக்கிறார். வெடிகுண்டா என உஷாரான சென்னை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், உடனடியாக ஈரோடு மாவட்ட மற்றும் ரயில்வே போலீசாருக்கு இந்தத் தகவலை கூறி எச்சரிக்கை செய்துள்ளனர்.
ஈரோடு முழுவதும் நேற்று இரவு போலீசார் உஷார் படுத்தப்பட்டு அனைத்துப் பகுதிகளிலும் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டது. கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்ஃபோன் நம்பரின் டவர் சிக்னலை வைத்தும் ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது ஈரோடு பஸ் ஸ்டாண்டு அருகில் மிரட்டல் விடுத்த செல்ஃபோன் சிக்னல் கிடைத்தது. இதையடுத்து பஸ் ஸ்டாண்டு, நாச்சியப்பா வீதி, மூலப்பட்டறை ரோடு, சத்திரோடு உள்ளிட்ட பகுதிகளை ப்ளாக் செய்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த ஒரு நபரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், சங்கர்நகரைச் சேர்ந்த ரங்கராஜன் என்பவரின் மகன் சந்தோஷ்குமார் (32) என்பதும், சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது அவர் தான் என்பதும் தெரியவந்தது. மேலும், இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும், ஏற்கனவே இதுபோன்று இரன்டு முறை வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.