"ஐயா, சாமி... நாங்க செத்துப் போன எங்க புள்ளைக உயிரை திருப்பிக் கேட்கலே... அவுங்க எப்படி செத்தாங்கனு நீதி தானுங்கைய்யா கேட்கிறோம்" என பரிதாபமாக கண்ணீர் விடுகிறார்கள் இரண்டு பெண் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர் .
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கழுதப்பாளி என்கிற குக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கரியான் மற்றும் ஆறுமுகசாமி. விவசாய கூலி வேலை செய்து வரும் இவர்கள் அவர்கள் நேற்று தங்களது குடும்பத்தினருடன் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அங்கு நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு ஒன்றை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தனர். பிறகு அவர்கள் கூறும்போது
நாங்கள் இரண்டு குடும்பம் எங்கள் கிராமத்தில் பக்கத்து பக்கத்து வீட்டில் வசித்து வருகிறோம். எங்களது மகள்கள் 16 வயது சுகந்தி, 14 வயது ஓவியா இருவரும் அரசு பள்ளியில் சுகந்தி பத்தாம் வகுப்பும் ஓவியா எட்டாம் வகுப்பும் படித்து வந்தார்கள்.
கடந்த ஜனவரி மாதம் 1 ந் தேதி புது வருடம் இருவரும் கோயிலுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு போனவர்கள் தான் அவர்கள் இருவரும் மீண்டும் திரும்பி வரவே இல்லை. மூன்றாவது நாள் அதாவது ஜனவரி மாதம் 3 ஆம் தேதி பூங்கில்பட்டி என்ற இடத்தில் ஓடும் பவானி ஆற்றில் சுகந்தியும் ஓவியாவும் பிணமாக மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் பிரேத சோதனை அறிக்கையில் சுகந்தியும் ஓவியாவும் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டதாக தெரிவித்து இருந்தனர். ஆனால் நாங்கள் இதை நம்பவில்லை. எங்களது மகள்கள் சாவில் மர்மம் இருக்கிறது. சுகந்தியும், ஓவியாவும் இறப்பதற்கு முன்பு பவானி ஆற்றங்கரையில் இருவரும் போட்டோவுக்கு போஸ் கொடுத்த படம் வெளி வந்துள்ளது. எனவே தான் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எங்களது மகள்களுடன் உடன் சென்றவர்கள் யார்?யார்? என்று போலீசார் விசாரிக்க வேண்டும். இதற்கு உண்மை நிலையைக் கண்டறிய மாநில சிறப்பு புலனாய்வுத் துறை மூலமாக இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். நாங்களும் இந்த ஏழெட்டு மாதமாக ஒவ்வொரு அரசாங்க ஆபீசுக்கும் போய் மனு கொடுத்திட்டோம். இன்னும் எங்களுக்கு நீதி கெடக்கலே. நாங்க கேட்கறது எங்கபுள்ளைக இறந்தது இறந்தது தான் ஆனா அது விபத்து இல்லே என்னவோ நடந்திருக்குது அது என்னனு எங்களுக்கு உண்மை தெரியோனும் சாமி " என கண்ணீருடன் கதறினார்கள் மகள்களை பெற்ற பெற்றோர் .