ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை மூலம் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை , கீழ்பவானி மற்றும் காலிங்கராயன் வாய்க்கால் என மூன்று வாய்கால்கள் மூலம் விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.
காளிங்கராயன் பாசனத்தில் 20 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. தற்போது பெரும்பாலான பகுதிகளில் முதல்கட்ட நெல் அறுவடை நிறைவு பெற்றுவிட்டது. அடுத்து தற்போது இரண்டாம் போக சாகுபடி பணி தொடங்கியிருக்கிறது.
கருங்கல்பாளையம், வைரா பாளையம், கிருஷ்ணம்பாளையம், சுண்ணாம்பு ஓடை, பாலக்காட்டூர் அக்ரஹாரம், ஆர்.என்.புதூர் பகுதிகளில் வாய்க்கால்களில் ஈரப்பதம் அப்படியே உள்ளதால் உழவு பணியில் பெரும்பாலான விவசாயிகள் தீவிரமாகி உள்ளனர். பல பகுதிகளில் நாற்றங்கால் பணி முடிந்து நடவு பணியும் தொடங்கியுள்ளது.
இது சம்பந்தமாக விவசாயிகள் கூறும்போது, சென்ற ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் நல்ல மழை பெய்ததால் பவானிசாகர் அணை முழுமையாக நிரம்பியது மேலும் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் தை மாத தொடக்கத்திலேயே நாங்கள் முதல்போக விளைச்சலை முடித்துவிட்டோம். இனி அடுத்து இரண்டாம் போக விவசாய பணியை தொடங்கிவிட்டோம். இங்கு பிபி டி பொன்னி ரகம் அதிக அளவில் நடவு செய்யப்பட்டு வருகிறது" என்றனர்.
இந்த காளிங்கராயன் வாய்க்கால் பாசானம் என்பது முப்போகம் கொண்டது. பல வருடங்களுக்கு பிறகு முப்போக விவசாயம் செய்யும் மகிழ்ச்சியில் உள்ளனர் விவசாயிகள்.