Skip to main content

"ஈரோடு மாவட்டத்தில் சாலை விபத்துக்கள் அதிகம் நடக்கின்றன"- அமைச்சர் எ.வ.வேலு தகவல்! 

Published on 28/09/2022 | Edited on 28/09/2022

 

 

erode district road incident high says minister velu


சாலை விபத்துக்களைக் குறைப்பது குறித்த ஆய்வுக் கூட்டத்தை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (28/09/2022) நடந்தது. இதில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் கலந்துக் கொண்டனர். 

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "கடந்த ஆட்சிக் காலத்திலேயே சேலம்- சென்னை எட்டு வழிச்சாலை என்பது ஆறு வழிச்சாலை என அறிவிப்பு வந்தது. இது குறித்து மத்திய அரசு, மாநில அரசின் கருத்தைக் கேட்டுள்ளது.  தற்போது தமிழக அரசு அடுக்கடுக்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறது. எனவே இது குறித்து முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். மேலும் அமைச்சரவை கூடி முடிவெடுக்கும். சென்னை பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த 15 பஞ்சாயத்துக்களைச் சேர்ந்த விவசாயிகளின் கருத்து கேட்புக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடந்தது. இதில் நான், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

நிலத்திற்கு சந்தை மதிப்பீட்டில் 3.5 மடங்கு இழப்பீடு வழங்கப்படும். வீடுகள் கட்டித் தரப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் பழைய சாலை மீது புதிய சாலை போடும்போது வீடுகள் பள்ளத்தில் சென்று விடுகின்றன. இதைத் தவிர்ப்பதற்காக பழைய சாலையை தோண்டி எடுத்துவிட்டு புதிய சாலைப் போட வேண்டும் என கூறியுள்ளோம். ஈரோடு மாவட்டத்தில் சாலை விபத்துக்கள் அதிகம் நடக்கின்றன. எனவே முதலமைச்சர் சாலை விபத்தைக் குறைப்பது குறித்த ஆய்வுக் கூட்டத்தை நடத்த கூறினார்.

 

இதில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல அமைப்புகள் கருத்துக்களைக் கூறினார்கள். அவர்களின் கருத்து கவனத்தில் கொள்ளப்படும். ஒவ்வொரு மாதமும் சாலை விபத்துகளை குறைப்பது குறித்த ஆய்வு கூட்டத்தை நடத்துமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் 63 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலை, 42 கிலோ மீட்டர் மாநில நெடுஞ்சாலை, 548 கிலோ மீட்டர் மாவட்ட சாலைகள், 1,859 கிலோ மீட்டர் இதர சாலைகள், 172 கிலோ மீட்டர் கரும்பு அபிவிருத்தி சாலை என 3,602 கிலோ மீட்டர் சாலைகள் உள்ளன.

 

கடந்த ஆண்டு 160 கிலோமீட்டர் சாலைகள் ரூபாய் 158 கோடி மதிப்பீட்டிலும், நடப்பாண்டு 134 கிலோ மீட்டர் சாலைகள் ரூபாய் 176 கோடி செலவிலும் மேம்படுத்தப்படுகின்றன. தொப்பபூர், மேட்டூர், பவானி தேசிய நெடுஞ்சாலை ரூபாய் 89 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. பவானி புற வழிசாலைக்கு ரூபாய் 85 கோடி மதிப்பீட்டில் டெண்டர் கோரப்பட்டு பணிகள் துவங்க உள்ளன. சத்தியமங்கலம் வனப்பகுதிியில் உள்ள திம்பம் மலைப் பாதையில் 8, 9, 10 வளைவுகள் மற்றும் 4 இடங்களிலும் விபத்துகளை தடுக்க சாலை விரிவாக்கம் செய்ய விரிவான திட்ட அறிக்கை கோரப்பட்டுள்ளது.

 

அதேபோன்று விபத்து அதிகம் ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு 23 இடங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. எஞ்சிய பகுதிகளும் மேம்படுத்தப்படும். இதற்கான மொத்த செலவு ரூபாய் 15.26 கோடியாகும். மாவட்டத்தில் 3 இடங்களில் ரயில்வே மேம்பாலம் கட்டுவது குறித்த விரிவான திட்ட அறிக்கை கோரப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் அம்மாபாளையம் பகுதியில் பாலம் கட்டப்படும். நபார்டு திட்டத்தின் கீழ் 40 பஞ்சாயத்து கிராம சாலைகள் 70 கிலோ மீட்டர் தூரத்திற்கு, இந்த ஆண்டு மேம்படுத்த ப்படும் நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தின் கீழ் சாலை விபத்தில் பாதிப்படைந்த 1.16 லட்சம் மக்களுக்கு ரூபாய் 103 கோடி மதிப்பில்லான மருத்துவ உதவிகள் 678 மருத்துவமனை மூலம் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

 

சார்ந்த செய்திகள்