Skip to main content

ஈரோட்டில் ஏறுமுகமாகவே இருக்கும் கரோனா பாதிப்பு !!

Published on 02/06/2021 | Edited on 02/06/2021
Erode district on the rise due to corona damage

 

ஈரோடு மாவட்டத்தில் அண்மை நாட்களில் கரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவி வருகிறது.  சென்னை, கோவை போன்ற பெருநகரங்களுக்குப் போட்டியாக தினசரி பாதிப்பும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் தினசரி பாதிப்பு குறைந்து வந்தாலும், ஈரோட்டில் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது. அதேபோல ஒவ்வொரு நாளும் அதிக அளவில் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. முதலில் மாநகர் பகுதியில் வேகமாகப் பரவிய தொற்று, சென்ற மாதம் முதல் கிராமங்களிலும் அதிகமாகப் பரவி வருகிறது.  

 

இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், காவல் துறை, சுகாதாரத் துறையினர், மாநகராட்சி, உள்ளாட்சி ஆகிய துறையினர் ஒன்றிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை தினசரி பாதிப்பு 100-க்கு  கீழ்தான் இருந்தது.  ஆனால் ஏப்ரல் மாதத்திலிருந்து தினசரி பாதிப்பு இருநூறு என தாண்ட தொடங்கியது. மே மாதம் தொடக்கத்திலிருந்து கரோனா தினசரி பாதிப்பு அதிக உச்சத்தைத் தொட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும்  300, 400, 500 என படிப்படியாக உயர்ந்து இப்போது 1,700 என்ற எண்ணிக்கைக்கு வந்துள்ளது. இதைப்போல் உயிரிழப்பும் மே மாதத்தில் தான் அதிகமாக ஏற்பட்டுள்ளது. 

 

மே மாதம் 1ஆம் தேதியிலிருந்து 31ம் தேதி வரை மட்டும் ஈரோட்டில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்து 543 ஆகும். இதே காலகட்டத்தில் நோய் பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆயிரத்து 528 ஆக உள்ளது.  இதைப் போல் மே மாதத்தில் மட்டும் 193 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். ஈரோட்டில் கரோனாவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 56 ஆயிரத்து 644 ஆக உயர்ந்துள்ளது. 40 ஆயிரத்து 408 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 348 இதுவரை உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 15, 888 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்