சொல்லிடங்கா துன்ப துயரத்தை மக்களுக்கு தொடர்ந்து கொடுத்து வருகிறது கரோனா வைரஸ் தொற்றும், அதனால் ஏற்பட்ட ஊரடங்கு முடக்கமும். இந்த வைரஸ் தொற்று மார்ச் மூன்றாம் வாரத்தில் தமிழகத்திற்குள் நுழைந்தது. அப்போதே ஈரோடு அபாயகரமான நகரமாக மத்திய அரசு அறிவித்தது. ஈரோட்டுக்கு இந்த வைரஸ் தொற்று வந்த பாதை என்பது தாய்லாந்து நாட்டிலிருந்து ஈரோடு வந்து இரு மசூதிகளில் தங்கிய 7 நபர்கள் மற்றும் டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாட்டுக்கு ஈரோட்டிலிருந்து சென்று வந்த சில நபர்கள் என அவர்கள் மூலமே வைரஸ் தொற்று ஊடுருவியது. தொடக்கத்திலேயே அந்த பாதையை கண்டுபிடித்து அதிரடி நடவடிக்கை எடுத்தது ஈரோடு மாவட்ட நிர்வாகம்.
மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கணேசன் மற்றும் சுகாதாரத்துறை, மாநகராட்சி நிர்வாகம் என அனைத்துத் துறை அலுவலர்களும் கூட்டு முயற்சியாக களத்தில் இறங்கினார்கள்.
பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு தடைசெய்யப்பட்டது. காவல் துறை, சுகாதாரத்துறை, தூய்மைப் பணியாளர்கள் என நூற்றுக்கணக்கில் களமிறங்கி செயல்பட்டனர். இதன் ஒட்டுமொத்த விளைவாக இந்த வைரஸ் தொற்று அதிகம் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. மொத்தமாக ஈரோடு மாவட்டத்தில் 70 பேர் மட்டுமே இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றனர். அதில் ஒருவர் மட்டும் இறந்துவிட மீதி 69 பேரும் நலம் பெற்று வீடு திரும்பினார்கள். இதற்காக உழைத்த அதிகாரிகளை பாராட்டும் விதமாக இன்று கோபிசெட்டிபாளையத்தில் குறிப்பாக காவல்துறை அதிகாரிகள், போலீசாரை பாராட்டி மாவட்ட அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் எம்எல்ஏ கருப்பண்ணன் ஆகியோர் மாவட்ட எஸ்பி சக்தி கணேசனுக்கும் இதர காவல்துறை அதிகாரிகள் ஊழியர்களுக்கும் பாராட்டு தெரிவித்து பாராட்டுப் பத்திரம் வழங்கினார்கள். போலீசார் மத்தியில் இது அவர்களின் உழைப்பை ஊக்குவிக்கும் விதமாக அமைந்தது.