பிரபலமான மாட்டுச் சந்தைகளில் ஒன்று, ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை. வாரந்தோறும் புதன் இரவு முதல் வியாழக்கிழமை வரை, இந்த மாட்டுச் சந்தை கூடும். இந்தச் சந்தைக்கு ஈரோடு மற்றும் சுற்றுப்புற மாவட்டமான நாமக்கல், சேலம், திருப்பூர், கரூர் மேலும் தென்மாவட்டங்களில் இருந்தும், மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படும்.
இந்த மாடுகளை வாங்க கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளிமாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள், அதிகளவில் வந்து மாடுகளை வாங்கிச் செல்வது வழக்கம். கடந்த வாரம் ‘புரவி’ புயல் மழை காரணமாக மாடுகள் வரத்துக் குறைந்தது. இந்த நிலையில், 10ஆம் தேதி கூடிய சந்தையில், மாடுகள் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்காளம், கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் அதிக அளவு வந்திருந்தனர். ஆனால், அதேநேரம் கேரளாவில் இருந்து இன்று வியாபாரிகள் வரவில்லை. அங்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால், இன்று வியாபாரிகள் வரவில்லை.
இதுகுறித்து மாட்டுச் சந்தை நிர்வாகிகள் கூறுகையில், புயல் எதிரொலி, கனமழை காரணமாக, கடந்த 2 வாரமாக மாட்டுச் சந்தையில் மாடுகள் வரத்துக் குறைந்து காணப்பட்டது. இன்று மாடுகள் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. இன்று பசு மாடு -600, எருமை மாடு -400, வளர்ப்புக் கன்றுகள் -100 என மொத்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வந்தது. பசுமாடு, ரூபாய் 30 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை விற்பனையானது. எருமை மாடு, ரூபாய் 25 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை விலை போனது. கன்றுக் குட்டிகள் ரூபாய் 10 ஆயிரம் முதல் ரூபாய் 15 ஆயிரம் வரை என விலை இருந்தது. இன்று, 96 சதவீதம் மாடுகள் முழுமையாக விற்பனையானது என்றனர்.
பல கோடி ரூபாய் வருவாயைக் கொண்ட இந்த மாட்டுச் சந்தை மீண்டும் களைக்கட்டியது.