
தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி, இந்த மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், பல்வேறு துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
அதன் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, "தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது. சென்னையில் சிறுமியைக் கடத்த முயன்ற வழக்கில் நடவடிக்கை எடுத்த காவல்துறைக்குப் பாராட்டுகள். கரோனா காலத்திலும் அதிக முதலீடுகளை ஈர்த்து தமிழகம் முதல் மாநிலமாகத் திகழ்கிறது. பெரியார் சிலை அவமதிப்பு விவகாரத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தலைவர்களின் சிலைகள் அவமதிக்கப்படுவதை ஏற்க முடியாது. மின் கட்டண கணக்கீட்டில் எந்தக் குளறுபடியும் இல்லை. ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி தி.மு.க. போராட்டம் நடத்துகிறது. ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. ஈரோட்டில் கரோனா தொற்று அதிகரித்தால் சிகிச்சை அளிக்க 4,668 படுக்கை வசதிகள் உள்ளன. பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கரோனா தொற்றைத் தடுக்க முடியும். அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் 30% பணிகள் முடிந்துள்ளன.

கீழ்பவானி பாசன திட்டக் கால்வாயைப் புனரமைப்பது பற்றி அரசு பரிசீலித்து வருகிறது. ரூபாய் 935 கோடி மதிப்பிலான கருத்துரு மதிப்பு அரசின் பரிசீலனையில் உள்ளது. பவானி ஆற்றின் குறுக்கே ரூபாய் 81 கோடியில் 7 தடுப்பணைகள் கட்டப்படும். 2020-21 ஆம் ஆண்டில் மேட்டூர் கால்வாயைச் சீரமைக்கக் கூடுதல் நிதி ஒதுக்கப்படும். ரூபாய் 222 கோடியிலான கொடிவேரி கூட்டுக்குடிநீர்த் திட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்." இவ்வாறு முதல்வர் பேசினார்.