ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டதால் கூடுதலாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்படுவதால் அவற்றை தயார்ப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மொத்தமுள்ள 238 வாக்குச் சாவடிகளில் பயன்படுத்துவதற்காக 286 வாக்குப்பதிவு எந்திரங்கள், 286 கட்டுப்பாடு எந்திரங்கள், 310 விவிபேட் எந்திரங்கள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியானதால் கூடுதலான வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்படுகின்றது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 5 வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்படுகின்றன. எனவே கூடுதலாக 1100 வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கப்பட உள்ளது.
இந்த கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் டி.ஆர்.ஓ அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் கொண்டு வந்து வைக்கப்பட்டது. ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும் 5 வாக்குப்பதிவு மற்றும் 1 கட்டுப்பாட்டு எந்திரம் பொருத்தப்பட உள்ளது. கூடுதல் எந்திரங்களை சரிபார்க்கும் பணி 11ம் தேதி தொடங்கியது. மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி முதற்கட்ட சரிபார்க்கும் பணியை பார்வையிட்டார். அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பெல் நிறுவன பொறியாளர்கள் எந்திரங்களை பரிசோதித்து அதனை சரி பார்க்கின்றனர்.
இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி கூறுகையில், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு ஏற்கனவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு சரிபார்க்கப்பட்டது. இறுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதில் 77 பேர் களத்தில் உள்ளனர். இதனால் இந்த தேர்தலில் வாக்குப்பதிவு செய்யும் ஒரு இடத்தில் மட்டும் 5 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக கூடுதலாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்படுகிறது. கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டது. இந்த இயந்திரங்களுக்கான முதற்கட்ட சரிபார்ப்பு பணி இன்று நடக்கிறது. இந்த பணி மூன்று நாட்கள் நடைபெறும். இதுவரை தேர்தல் விதிமுறையை மீறியதாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.வேட்பாளர்கள் எண்ணிக்கை கூடியுள்ளதால் வாக்குப்பதிவு எண்ணிக்கை சுற்று அதிகரிக்கப்படுமா? என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்." என்றார்.