தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான மானியக்கோரிக்கைகளும், விவாதங்களும் நடைபெற்றுவருகின்றன. தற்போது நடைபெற்றுவரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானங்களையும் கொண்டுவருகின்றனர்.
அந்த வகையில், எடப்பாடி பழனிசாமி இன்று கொரோனா பரவல் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அந்தத் தீர்மானத்தில் அவர், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 400க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் முகாம்களை அமைக்க வேண்டும். வீடு வீடாக சென்று பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். தேவையான அளவு தடுப்பூசிகளும், ஆக்ஸிஜன் வசதிகளும் கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாடு முழுவதும் நேற்றும் இன்றும் மாவட்ட ஆட்சியர்கள் அவர்கள் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர். இந்த ஆய்வில், மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளின் வசதி மற்றும் எண்ணிக்கை, ஆக்ஸிஜன் கையிருப்பு மற்றும் மருந்துகளின் கையிருப்புகளை ஆய்வு செய்கின்றனர்.
2021ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற நேரத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக இருந்தது. அப்போது நமது கையில் வெறும் 230 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் இருந்தது. அதன்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையால் தற்போது, 2,067 மெட்ரிக் டன் அளவுக்கு நம்மால் ஆக்ஸிஜனை சேமிக்க முடியும்.
மேலும் தற்போதைய கொரோனா பாதிப்பு என்பது உயிர் பறிக்கும் பாதிப்பாக இல்லை. இந்தத் தொற்று தொண்டை வலி, சளி, இரும்பல், உடல் வலி, காய்ச்சல் என்ற அளவிலேயே தான் இருக்கிறது. மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதிவேண்டும் எனும் நிலையிலோ, அதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு வரவேண்டிய நிலையோ இல்லை.
மருத்துவமனைகளில் முகக் கவசம் கட்டாயம் என்பதை அறிவித்திருக்கிறோம். மேலும் பரவல் அதிகரித்தால் பொதுமக்கள் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்பதைக் கொண்டுவரலாம் என முதல்வர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் முகக் கவசம் அணிவது நல்லது. தற்போது தமிழ்நாட்டில் பெரிய அளவிலான பதட்டம் இல்லை.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் ஐந்து இறப்புகள் கொரோனா பாதிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் யாரும் நேரடியாக கொரோனா பாதிப்பால் இறக்கவில்லை. இவர்கள் அனைவருக்கும் துணை நோய் இருந்துவந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.