கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கோட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். பொறியியல் பட்டதாரியான இவர், படிப்புக்கேற்றபடி வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு வந்தவர் இயற்கை வேளாண் அறிவியலாளர் மறைந்த கோ.நம்மாழ்வாரின் கருத்துகள், பேச்சுகள் மூலம் ஈர்க்கப்பட்டு பாரம்பரியமான இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்டார். அதன் பொருட்டு சில தனியார் நிலங்களை குத்தகைக்கு பெற்று கருப்புக்கவுனி, மாப்பிள்ளை சம்பா போன்ற மரபுவழியான நெல் பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். பாரம்பரிய விவசாயம் செய்து வருவதோடு மட்டுமல்லாமல் இந்த மரபு வழி இயற்கை விவசாயத்தை மற்ற விவசாயிகளுக்கும் கொண்டு செல்லும் வகையில் 'செந்தமிழ் இயற்கை வேளாண் நடுவம்' என்ற அமைப்பையும் நடத்தி, அதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 'மரபுவழி விதைத் திருவிழா' நடத்தியும், மற்ற விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மையை கொண்டு செல்லும் பணியையும் செய்து வருகிறார். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகளிலும் அக்கறை கொண்டு துணிப்பை இயக்கத்திலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் சிவக்குமார் தனது குழந்தைகளுக்கு முதனை செம்பையனார் கோயிலில் காதணி விழா நிகழ்வினை நடத்த ஏற்பாடு செய்திருந்தார். முன்னதாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் அளிக்கப்பட்ட அழைப்பிதழிலும் கூட சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காகிதத்தால் ஆன பத்திரிக்கையை பயன்படுத்தாமலும், நெகிழி பயன்பாட்டை தவிர்த்தும் 'துணிப்பை பத்திரிகை' அச்சடித்து உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கினார். நேற்று (06.04.2022) முதனை செம்பையனார் கோயிலில் நடைபெற்ற காதணி விழாவின் ஒரு பகுதியில் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பாரம்பரிய நெல் வகைகள், நாட்டு சர்க்கரை, மரச்செக்கு எண்ணெய் வகைகள், மரபு ரக விதைகள், பண்டைய கால கைவினைப் பொருட்கள், மூலிகை மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என இயற்கை விவசாயம் சார்ந்த கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தார். இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சமூக நலன் என பல்வேறு தலைப்புகள் கொண்ட புத்தகங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது, காண்போரை வெகுவாக கவர்ந்தது. நேற்று இயற்கை வேளாண் அறிவியலாளர் மறைந்த கோ.நம்மாழ்வாரின் பிறந்தநாள் என்பதால், அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு, அதில் மரபுவழி விதை ரகங்களை மீட்பது எனவும், மரபுவழி வேளாண்மையை தீவிரப்படுத்துவது எனவும் அறிவுறுத்தப்பட்டது.
அதுமட்டுமில்லாமல் காதணி விழாவுக்கு வந்தவர்களுக்கு பாரம்பரிய நெல் ரகமான சொர்ணமசூரி கைக்குத்தல் அரிசி கொண்டு சமையல் செய்யப்பட்ட சோறு, ரசாயனம் கலக்காத காய்கறிகளை கொண்டு சமைக்கப்பட்ட குழம்பு வகைகள் மற்றும் திணை பாயசம், கருப்புக்கவுணி அவல் உள்ளிட்டவைகள் தயார் செய்து பரிமாறப்பட்டது. மேலும் இயற்கையாக விளைநிலங்களில், அதிக அளவில் கிடைக்கக்கூடிய பொருட்களை கொண்டு, தயாரிக்கப்பட்ட சமைக்காத கூட்டு ரகங்களை பலரும் ஆர்வத்துடன் உண்டு மகிழ்ந்தனர்.
இரசாயனம் கலக்காத நஞ்சில்லா உணவு அனைவருக்கும் வழங்க வேண்டும், ஒருங்கிணைந்து செயல்படுவது மூலம் மரபுவழி மாற்றத்திற்கான இயற்கை விவசாயம் மற்றும் உணவு முறைகள் அமைய வேண்டும், நஞ்சில்லா உணவு முறைகள் மற்றும் விவசாயம் குறித்த விழிப்புணர்வை, சாமானிய மக்களுக்கும், இளைய சமுதாயத்திற்கும் கொண்டு செல்வதன் மூலம் எதிர்கால தலைமுறையினர் நெகிழி பயன்படுத்தாத தலைமுறையாகவும், சத்தான பாரம்பரிய உணவு முறையை கடைப்பிடித்து, சிறப்பான வாழ்க்கை வாழ வழிவகுக்கவும் இதுபோன்று நிகழ்வை வித்தியாசமாக ஏற்பாடு செய்ததாக இயற்கை விவசாயி சிவகுமார் தெரிவிக்கிறார்.
இந்நிகழ்வில் எழுத்தாளர் கண்மணி குணசேகரன், செந்தமிழ்க்காடு இயற்கை வேளாண் இயக்கம் முருகன்குடி முருகன், கரும்பு கண்ணதாசன், இயற்கை ஆர்வலர் காரைக்கால் பாஸ்கர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.