சமூக வலைத்தள பக்கங்களில் ஆபாசமாக சித்தரித்து கல்லூரி மாணவியின் படத்தை மர்ம நபர்கள் வெளியிட்டதால், அவமானத்தால் அந்த மாணவி கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோட்டைச் சேர்ந்த 21 வயது மாணவி ஒருவர், சேலத்தை அடுத்த கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் பி.இ., இறுதியாண்டு படித்து வருகிறார். கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவிகள் விடுதியில் தங்கியுள்ளார்.
ஜூன் 8- ஆம் தேதி அவர் மட்டும் விடுதி அறையில் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென்று அவர், பிளேடால் தனது கழுத்து மற்றும் கை நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையறிந்த சக மாணவிகள், அவரை மீட்டு உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அந்த மாணவிக்கு ரத்தம் அதிகமாக வெளியேறி இருந்ததால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கருப்பூர் காவல்நிலைய காவல்துறையினர் மாணவியிடம் விசாரணை நடத்தினர்.
மாணவியின் படத்தை, இன்ஸ்டாகிராம், ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மர்ம நபர்கள், போலி முகவரியை உருவாக்கி, ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளனர். அந்தப் படங்களை தோழிகள் மூலம் நீக்கவும் முயற்சி செய்துள்ளார். ஆனால் முடியவில்லை. அவமானத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். அதனால் அவர் கழுத்து மற்றும் கை நரம்பை பிளேடால் அறுத்துத் தற்கொலைக்கு முயன்றிருப்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அந்த மாணவி, சேலம் சூரமங்கலம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலி முகவரியில் தனது படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகாரில் கூறியுள்ளார். இந்த சம்பவம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.