போக்குவரத்துத் துறையில், சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தாய் மற்றும் தந்தை வசித்து வரும் பூர்வீக வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டாவது முறையாக இன்று (08.02.2024) சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கேரள பதிவெண் கொண்ட வாகனங்களில் வந்த 5 க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் கரூரில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அவரது சகோதரர் அசோக் குமார் வீடு, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர்கள் வீடு என கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 க்கும் மேற்பட்ட முறை சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.