மே 23 காலை 6 மணிக்குள் தபால் வாக்குகளை முழுமையாக செலுத்த ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஜாக்டோ ஜியோ வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 18-ம் தேதி நடந்த தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதியில் காரைக்குடி 345, சிவகங்கை 348, மானாமதுரை 321, திருப்பத்தூர் 334 என மொத்தம் 1,348 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு நடைபெற்ற இடங்களில் வாக்குப்பதிவு அலுவலர்களாக 7,312 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக தேர்தல் பணிச்சான்று மற்றும் தபால் வாக்குகள் வழங்கப்பட்டன. தேர்தல் பணிச்சான்று பெற்ற ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாக்குப்பதிவு நடந்த மையங்களிலேயே வாக்களித்து விட்டனர். தபால் வாக்குகள் பெற்றவர்கள் வாக்கு அளிக்க மே 23 காலை 6 மணி வரை கால அவகாசம் உள்ளது. இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகம் முழுவதும் 50 சதவீத ஆசிரியர்கள் தபால் வாக்குகளை அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜாக்டோ ஜியோ சார்பாக விடுக்கப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, "கடந்த 18-ம் தேதி நடைபெற்ற தேர்தலை எவ்வித முறைகேடுக்கும் இடம் கொடுக்காமல் நேர்மையாக சிவகங்கை மாவட்டத்தில் நடத்தி முடித்துள்ளோம். 100 சதவீத வாக்களிப்பை நிறைவேற்ற பல்வேறு விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்திய ஆசிரியர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட தபால் வாக்குகளை அளிக்காமல் காலம் தாழ்த்துவது ஜனநாயக கடமையில் இருந்து தவறியதாகிவிடும். இது சமூகத்தில் ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும். முழுமையான வாக்கு பதிவை நிறைவேற்ற தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில் ஆணையத்துக்கு துணை நிற்க வேண்டிய அரசு ஊழியர்கள் வாக்களிக்காமல் இருப்பது தன்னுடைய பணி விதிகளுக்கு முரண்பட்ட செயலாகும்.
மானாமதுரை சட்டமன்றத் தொகுதியில் வாக்குகள் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மற்ற மாவட்டங்களில் இருந்து இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு மட்டும்தான் தபால் வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன. மற்றவர்கள் அனைவரும் வாக்குப்பதிவு மையங்களில் தங்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் பணிச்சான்று மூலம் வாக்களித்துவிட்டனர். எனவே தபால் வாக்குகள் கைகளில் கிடைக்கப்பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கால தாமதப்படுத்தாமல் அவற்றை முறையாக வாக்களித்து, அரசிதழில் பதிவு பெற்ற அலுவலர்களிடம் கையொப்பம் பெற்று, உரிய உறைகளில் வைத்து அருகில் உள்ள அஞ்சலகங்கள் மூலம் பணமில்லா பதிவு தபாலில் மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டுமென" வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.