Skip to main content

 அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விடிய விடிய விசாரணை

Published on 08/08/2023 | Edited on 08/08/2023

 

enforcement department has been interrogating senthil Balaji since night

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாகச் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டு அங்கு மருத்துவக் கண்காணிப்பில் இருந்தார். 

 

இதனிடையே செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு வழக்கில், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது செல்லும் என்றும், அமலாக்கத்துறைக்குக் கைது செய்ய அதிகாரம் இருக்கிறது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தநிலையில், நீதிபதிகள் போபன்னா மற்றும் எம்.எம். சுந்தரேசன் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி கைது செல்லும் என்று கூறி செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதியளித்து உத்தரவிட்டு இருந்தனர். இதையடுத்து செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை சார்பில் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

 

அதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கச் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் இன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். 

 

நீதிமன்றத்தின் உத்தரவின்படி, புழல் சிறையிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதையடுத்து அமலாக்கத்துறை அலுவலகத்தின் 3 ஆவது மாடியில் வைத்து செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செந்தில் பாலாஜியிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு விசாரணை இடையே அவருக்கு சிறிது ஓய்வு தந்ததாகவும் கூறப்படுகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்