கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாகவே முன்பு நடந்ததை போல் சென்னை கலைவாணர் அரங்கில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டம் வரும் 7 ஆம் தேதி வரை நடைபெறும் என அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவையின் கேள்வி நேரம் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. இன்று சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 'நீட் தேர்வுக்கு எதிராக அடுத்தகட்ட சட்டப் போராட்டம் நடத்துவது குறித்து விவாதிக்க நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என கூறியிருந்தார்.
அதனைத்தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்துள்ள நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக எம்.எல்.ஏ வைத்திலிங்கம் வைத்தார். அதற்கு 'ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்' எனத் தமிழக முதல்வர் உறுதியளித்தார்.