கொத்தமங்கலத்தில் குடிதண்ணீர் கேட்டு காலி குடங்களுடன் ஊராட்சி அலுவகம் முற்றுகை!
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் ஊராட்சி, மாவட்டத்திலேயே பெரிய ஊராட்சி. இந்த ஊராட்சியில் பல பகுதிகளுக்கும் குடிதண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் பலமுறை போராட்டங்களை நடத்தியுள்ளனர். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பேட்டை மற்றும் தெற்கு பகுதி மக்கள் போராடியதால் எம்.எல்.ஏ மெய்யநாதன் தலையிட்டதில், ஆழ்குழாய் கிணறுகளை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் முடிந்துள்ளது. இந்த நிலையில் மேற்கு பகுதிக்கு பல மாதங்களாக குடிதண்ணீர் கிடைக்கவில்லை என்று பெண்கள் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த ஒன்றிய அலுவலர் தங்கள் பகுதிக்கு ஆழ்குழாய் கிணறு அமைக்க எம்எல்ஏ ரூ 4.25 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளார். மேலும், கூடுதல் நிதியாக ரூ.2 லட்சம் ஒதுக்கப்பட்டு எதிர் வரும் திங்கள் கிழமை ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி தொடங்கும் என கூறியதை பொதுமக்கள் எழுத்துப்பூர்வமாக தருமாறு கேட்டனர். அதிகாரி மறுத்ததால் மேலும் போராட்டம் தொடர்ந்த நிலையில், அங்கு வந்த எம்.எல்.ஏ மெய்யநாதன் உத்தரவாதம் சொன்ன பிறகு போராட்டம் முடிவுக்கு வந்தது.
- இரா.பகத்சிங்