திருவாரூர் மாவட்டம் சேந்தங்குடி பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கொலைக்கான காரணம் குறித்த பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளது.
திருவாரூர் மாவட்டம் சேந்தன்குடி பகுதியைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி ராகுல் (29). இவர் திருவாரூரில் உள்ள ஆவின் நிறுவனத்தில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் மாங்குடியில் இருந்து ஆந்தகுடி செல்லும் சாலை பகுதியில் ராகுல் சடலமாக கிடந்தார். அவர் பைக் விபத்தில் உயிரிழந்திருப்பதாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவருடைய தலையில் பலத்த வெட்டு காயம் இருந்ததால், அது விபத்தல்ல, திட்டமிட்ட படுகொலை என போலீசார் சந்தேகமடைந்தனர்.
தொடர்ந்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வந்தனர். விசாரணையில் நாகை மாவட்டம் ஆந்தகுடி பகுதியைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவரின் வீட்டிற்கு அடிக்கடி ராகுல் சென்று சென்று வந்தது தெரியவந்தது. மாணவியின் வீட்டிற்கு சென்று நடத்தப்பட்ட விசாரணையில் ராகுல், மருத்துவ மாணவியை காதலித்து வந்ததாக ஊரில் அனைவரும் தெரிவித்தனர். ஆனால் ராகுலோ மாணவியின் தாய் கவிதாவை ரகசியமாக காதலித்து வந்தது தெரிய வந்தது. இருவரும் அடிக்கடி ஆந்தகுடி வீட்டில் சந்தித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர்.
இந்நிலையில் அதே மருத்துவ மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த நந்து என்கிற உறவுக்கார இளைஞர் கவிதா - ராகுல் இடையே ஏற்பட்ட முறையற்ற தொடர்பால் ஆத்திரம் அடைந்துள்ளார். உறவுக்காரர் என்பதால் கவிதாவின் வீட்டிற்கு சென்ற நந்து, 'ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்' என கேட்டுள்ளார். அதற்கு, தான் ராகுலை விலக நினைத்தாலும் அவர் மறுக்கிறார் என கவிதா கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நந்தா, ராகுலின் வீடு தேடி சென்று இந்த முறையற்ற தொடர்பை கைவிடுமாறு கண்டித்துள்ளார். இந்த தகவல் தெரிந்து ராகுலின் வீட்டில் உள்ளவர்களும் அவரை கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று சொல்பேச்சு கேட்காதவராக ராகுல் கவிதாவையும் அவரது மகளையும் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு அழைத்து சென்று பின்னர் வீட்டில் இருவரையும் விட்டுவிட்டு திரும்பியுள்ளார். அப்பொழுது கவிதா கொடுத்த தகவலின் பேரில் ராகுலை பின் தொடர்ந்து வந்த நந்தா மற்றும் அவரது நண்பர்கள் ராகுலை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்துள்ளது. ஆனால் இந்த திட்டமிட்ட கொலையை மறைத்து ராகுலுக்கு சாலை விபத்து ஏற்பட்டதாக அவருடைய வீட்டிற்கு கவிதா தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொலையில் ஈடுபட்ட நந்து, அதற்கு உறுதுணையாக இருந்த கவிதா மற்றும் முருகேஷ், நிர்மல், மணிகண்டன் உள்ளிட்ட ஐந்து பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.