கேரள மாநிலம் கண்ணூர் அருகே தளாப் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் அணில்(26) என்ற இளைஞர் ஊழியராக வேலை செய்து வருகிறார். கண்ணூர் ஆயுதப்படையில் காவலராக சந்தோஷ்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சந்தோஷ்குமார், தளாப் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்குச் சென்று காருக்கு பெட்ரோல் போட்டுள்ளார். அதன்பின் அணில் பெட்ரோல் போட்டதற்குப் பணம் கேட்க, அதனைத் தராமல் காவலர் சந்தோஷ்குமார் காரை வேகமாக எடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து காரின் முன்னே சென்று அணில் தடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த காவலர் சந்தோஷ்குமார், காரின் முன் நின்றுக் கொண்டிருந்த அணிலை காரை கொண்டு வேகமாக மோதியுள்ளார். அதில் காரின் முன்பு ஆபத்தான நிலையில், ஊழியர் அணில் தொங்கியபடியே அமர்ந்திருந்தார். ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல், சந்தோஷ்குமார் 600 மீட்டர் வரை காரை ஓட்டிச் சென்றார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், காவல்துறை ஐ.ஜி.சுனில்குமார் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில் நடந்த விசாரணையில், காவலர் சந்தோஷ்குமார் பெட்ரோல் போட்டுவிட்டு பணம் கொடுக்காமல் மோசடி செய்ததும், ஊழியரை கார் ஏற்றிக் கொல்ல முயன்றதும் உறுதியானது. இதையடுத்து சந்தோஷ்குமார் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.