கடலூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கான அறுவடை பணி தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், விவசாயிகள் விளைவித்த நெல் பொருட்களை விற்பனை செய்வதற்காக, மாவட்டம் முழுவதும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த சி.கிரனூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால், சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 50 ஆயிரம் நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காகக் கொண்டுவந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பொழிந்த கனமழையால் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும், மழை நீரில் அடித்தும் செல்லப்பட்டன.
இதனால் தாங்கள் விளைவித்த நெல் வீணாகிப்போவதுடன் உரிய விலை கிடைக்காத வேதனையில் இருந்த விவசாயிகள், தங்கள் நெல்லை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாததே இந்த அவலநிலைக்குக் காரணம் எனவும் குற்றஞ்சாட்டினர். அதையடுத்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் சி.கீரனூர் கிராமத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது விவசாயிகள், “4 நாட்கள் மட்டும்தான் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. அதன் பின்பு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை” என புகார் தெரிவித்தனர். இதுகுறித்து நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரியும் PC என சொல்லக்கூடிய நிலைய அதிகாரியை விசாரித்தபோது, பல்வேறு விதமான காரணங்களைச் சொல்லி மழுப்பினார்.
பின்னர் பூதாமூரில் உள்ள தனியார் ரைஸ்மில்லில் இருந்த 691 மூட்டைகளைக் கொள்முதல் செய்து அரசு குடோனுக்கு அனுப்பியது தெரியவந்தது. தனியார் வியாபாரியின் நெல்லை, சி.கீரனூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்ததுபோல், போலி சான்றிதழ் அளித்து, அரசு குடோனுக்கு நெல் மூட்டைகளை அனுப்பிவைத்ததும் தெரியவந்தது. போலி சான்றிதழ் பெறுவதற்காக, கார்மாங்குடி கிராமத்தில் உள்ள விவசாயியின் பட்டாவையும், வல்லியத்தில் உள்ள விவசாயியின் சிட்டாவையும் பயன்படுத்தி, மருங்கூர் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் கையொப்பத்துடன் போலி சான்றிதழ் பெற்றுள்ளது தெரியவந்தது. மேலும், விவசாயிகளுக்காக அரசு கொடுத்த முத்திரை பதித்த 6000 சாக்குகளில் இருந்து, 600 சாக்குக்களைத் திருடி தனியார் வியாபாரிடம் கொடுத்ததும் தெரியவந்தது.
இதனை தெரிந்துகொண்ட நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள், உடனடியாக நிலைய ஊழியர் பரமசிவத்தை சஸ்பெண்ட் செய்தனர். அவர் அரசு குடோனுக்கு கொண்டு சென்ற நெல் மூட்டைகள் பற்றியும், அதற்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள் பற்றியும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.மேலும், போலி சான்றிதழ் அளித்த அரசு அதிகாரிகள் பற்றியும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதுபோல் கடலூர் மாவட்டம் முழுவதும் நடைபெறுவதாகவும், இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.