கடையில் திருடியதாக ஊழியர் மீது முதலாளி குற்றம் சுமத்தியதால் காலணி கடைக்கு தீ வைத்த சம்பவம் திருப்பத்தூரில் நிகழ்ந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே முகமது அமீன் என்பவர் காலணிக் கடை வைத்திருந்தார். இந்த கடையில் முகமது அப்பாஸ் என்ற இளைஞரை பணிக்கு அமர்த்தி இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் விற்பனையான தொகையிலிருந்து 200 ரூபாய் குறைவதாக ஊழியர் முகமது அப்பாஸிடம் கடை உரிமையாளர் முகமது அமீன் தெரிவித்துள்ளார். மற்றவர்களிடமும் இதைக் கூறியுள்ளார்.
தான் திருடிவிட்டதாக குற்றம்சாட்டியதால் ஊழியர் முகமது அப்பாஸ் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் முகமது அமீன் கடையை மூடிவிட்டு சென்ற பிறகு மறைத்து வைத்திருந்த இன்னொரு சாவியை வைத்து கடையை திறந்து முகமது அப்பாஸ் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். கடைக்குள் இருந்து புகைமூட்டம் வருவதை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதற்குள் கடையில் இருந்த 10 லட்சம் மதிப்பிலான காலணிகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. இந்த சம்பவத்தில் கடைக்கு தீ வைத்த ஊழியர் முகமது அப்பாஸை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். முகமது அப்பாஸ் கடைக்கு தீ வைக்கும் காட்சி அக்கம்பக்கத்தில் இருந்த கடைகளின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையிலேயே முகமது அப்பாஸை போலீசார் கைது செய்துள்ளனர்.