கேரள தமிழக எல்லை பகுதிகளான கோடிக்காடு, மதுக்கரை பகுதிகளில் உள்ள ரயில் பாதைகளில் யானைகள் ரயிலில் அடிப்பட்டு இறக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெறுகிறது. இது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் முதன்மை அமர்வு நீதிபதிகள் கொண்ட ஆணையம் வழக்கை தாமாக முன்வந்து எடுத்து விசாரித்தது. இந்த வழக்கில் தமிழக அரசின் வனத்துறை சார்பாக டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்க செயலாளரும், ராஜபாளையம் ஸ்ரீமாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்ற செயலாளருமான ராஜபாளையம் வழக்கறிஞர் ராம்சங்கர் ராஜா ஆஜரானார்.
யானைகள் ரயிலில் அடிப்படும் இடங்களை கடந்து செல்லும் வரையில் ரயிலின் வேகத்தை குறைத்து கொள்வது, ரயில் ஓட்டுனர்கள் மேற்படி இடங்களில் மிகுந்த கவனத்துடன் இருப்பது, அவர்களுக்கு தெரியும் வகையில் அறிவிப்பு பலகைகளை நிறுவுவது, அந்தந்த பகுதி அதிகாரிகளை (வனம் மற்றும் ரயில்வே) கொண்ட ஆய்வு குழு அமைக்க வேண்டும். குறிப்பாக யானைகள் நீர் அருந்த உதவும் வகையில் குளம், குட்டைகள் ரயில் பாதைகளின் இருபுறமும் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் அமைத்து தர வேண்டும். இதன் மூலம் குடிநீருக்காக தண்டவாளத்தை யானைகள் கடக்க வேண்டியது தவிர்க்கப்படும் என்பது உள்ளிட்ட வாதங்களை முன் வைத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஆதர்ஷ் குமார், சுதிர் அகர்வால், சத்யநாராயணன், பிரிகேஷ் சேதி, நாகின்நந்த ஆகியோர் அவற்றை நடமுறைப்படுத்த கேட்டுக்கொண்டதுடன் மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை கண்காணிப்பு குழுவுடன் தமிழக வனத்துறை மற்றும் தென்னக ரயில்வே இணைந்து பணியாற்றி இனி ரயில்வே அடிபட்டு யானைகள் இறக்கும் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.