ஆனந்த குளியல் போட ஏற்கனவே நீச்சல் குளம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் யானைகளுக்கு தற்போது நடைப்பயிற்சி செய்ய பிரத்யேக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி கோவிலில் ஆண்டாள் மற்றும் பிரேமி என்கிற லட்சுமி ஆகிய இரண்டு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
யானைகளுக்கு மாதம் இரண்டு முறை கால்நடை டாக்டர்கள் மூலம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்கோவிலின் வடகரையில் உள்ள உடையவர் தோப்பில் ஏற்கனவே இந்த யானைகள் நீராடுவதற்காக 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குளியல் தொட்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் தற்போது 857 மீட்டரில் யானைகள் நடந்து செல்வதற்கு பிரத்தியேகமாக நடைபாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக ஏற்படுத்தப்பட்ட நடைபாதையை இன்று கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பயன் பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
புதிதாக உருவாக்கப்பட்ட நடைபாதையின் வாயிலாக கடந்து சென்ற யானைகள் நீச்சல் தொட்டியை கண்டதுடன் ஆர்ப்பரித்து நீராடி மகிழ்ந்தன. நதி, ஏரி, குளம் போன்றவற்றை கண்டதுடன் ஆர்ப்பரித்து குதித்து குளியல் போடுவதில் மனிதர்களை மிஞ்சுகிறது யானைகள்.