தர்மபுரி அருகே, விவசாய நிலத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்த சம்பவத்தில், வனத்துறை ஊழியர்கள் மூன்று பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள நல்லம்பட்டியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (52). விவசாயி. இவருக்குச் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அதில் நெல் பயிரிட்டுள்ளார். நெற்பயிர்களை காட்டு விலங்குகள் சேதப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக விவசாய நிலத்தைச் சுற்றிலும் மின்வேலி, மின்விளக்கு அமைத்துள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்பு, அந்த வழியாக வந்த மக்னா யானை, சீனிவாசனின் நிலத்திற்குள் செல்ல முயன்றபோது மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் பாலக்கோடு காவல்நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், விவசாயி சீனிவாசன் மின்வாரியத்தின் அனுமதியின்றி நிலத்தைச் சுற்றிலும் மின்வேலி அமைத்து இருந்தது தெரியவந்தது. யானை இறந்த சம்பவத்திற்குப் பிறகு சீனிவாசன் தலைமறைவாகிவிட்டார். காவல்துறையினர் தேடி வருவதை அறிந்த அவர், மே 13ம் தேதி மாரண்டஅள்ளி காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், நீதிமன்ற உத்தரவின்பேரில் தர்மபுரி கிளைச்சிறையில் அடைத்தனர்.
இது ஒருபுறம் இருக்க, பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக பாலக்கோடு வனச்சரகர் செல்வம், வனக்காப்பாளர் கணபதி, வனவர் கல்யாணசுந்தரம் ஆகியோரை பணியிடைநீக்கம் செய்து தர்மபுரி மண்டல வனப்பாதுகாவலர் பெரியசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வனப்பாதுகாவலர் பெரியசாமி கூறுகையில், ''வனச்சட்டத்தின்படி மின்வேலி அமைக்கப்படக் கூடாது. தடையை மீறி யாராவது மின்வேலி அமைத்துள்ளார்களா என ரோந்து சென்று கண்காணிக்க வேண்டிய வனத்துறையினரின் கடமை. தற்போது பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள வன ஊழியர்கள் முன்கூட்டியே ரோந்து சென்றிருந்தால், கண்காணிப்புடன் இருந்திருந்தால் இன்றைக்கு ஒரு யானை இறந்திருக்காது. அதனால்தான் கவனக்குறைவாக இருந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.