நேற்று முன்தினம் (06.11.2021) இரவு முதலே சென்னையில் விட்டுவிட்டுத் தொடர்ந்து மழை பொழிவதால் சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. திருவொற்றியூர், ஆவடி, பட்டாபிராம், மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவும் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் நீர் தேங்கியதால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் வீடுகளில் மழைநீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் பல இடங்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது குறித்து தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார், ''பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் சென்னையில் மீட்புப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. மின்சாரத்துறையைப் பொறுத்தவரை சீரான மின் விநியோகம் இருக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார்கள். குறிப்பாக, மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் எந்தவித பாதிப்புகளும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற கண்டிப்பான உத்தரவை தமிழ்நாடு முதல்வர் கொடுத்துள்ளார். சென்னையில் இருக்கக் கூடிய 223 துணைமின் நிலையங்களில் ஒரே ஒரு துணை மின்நிலையத்தில் மட்டும் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 1,757 ஃபீடர்களில் 18 ஃபீடர்களில் மட்டும் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. 34,047 மின்மாற்றிகளில் 201 மின்மாற்றிகளில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. 44 லட்சத்து 50 ஆயிரம் மின் பயனீட்டாளர்களில் 12,297 மின் பயனீட்டாளர்களுக்கான மின்விநியோகம் மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மின்விநியோகம் தொடர்பான புகார்களுக்கு 9498794987 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம். மழைநீர் வடிந்தபின் மின்விநியோகம் சீர்படுத்தப்படும்'' என்றார்.