செங்கல்பட்டு செல்வதற்காக கடற்கரை பணிமனையில் இருந்து 12 பெட்டிகளைக் கொண்ட மின்சார ரயில், கடற்கரை ரயில் நிலையத்தின் முதலாவது ரயில் மேடைக்கு நேற்று மாலை 04.25 மணிக்கு வந்து கொண்டிருந்தது. ரயிலை பவித்ரன் என்பவர் ஓட்டிவந்தார். நிறுத்துமிடத்திற்கு அருகே ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயற்சித்தபோது, கட்டுப்பாட்டை இழந்த ரயில் தடுப்பையும் மீறி நடைமேடை மீது ஏறி நின்றது. அப்போது, தீப்பொறி எழுந்ததுடன், பயங்கர சத்தமும் கேட்டுள்ளது. இந்த விபத்தில் நடைமேடையில் அமைந்துள்ள பயன்பாட்டில் இல்லாத இருகடைகளும் நடைமேடையின் மேற்கூரையும் சேதமடைந்தன. ரயிலில் இருந்து குதித்த ஓட்டுநர் பவித்ரன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த நிலையில், ஓட்டுநர் பவித்ரன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே சொத்தை சேதப்படுத்துதல், உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் இயக்குதல், ரயில் பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அலட்சியமாக செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள ரயில்வே காவல்துறையினர், ஓட்டுநர் பவித்ரனிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.