கூலி வேலை செய்துவிட்டு குளத்தில் குளிக்கச் சென்ற இரண்டு தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ராமன் மகன் குமாரவேல் (45). சுமைதூக்கும் தொழிலாளியான இவர் லாரியில் வந்த மூட்டைகளை இறக்கிவிட்டு மதியம் வழக்கமாக குளிக்கும் மாரியம்மன் கோயில் குளத்தில் குளித்துவிட்டு ஓய்வெடுக்க குளக்கரையில் உள்ள தடுப்பு முள்வேலி அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் கட்டையில் அமர்ந்த போது முள்வேலியில் வந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்து விழுந்துள்ளார். அந்த வழியாகச் சென்றவர்கள் அவர் போதையில் கிடப்பதாக நினைத்து சென்றுள்ளனர்.
அதேபோல கீரமங்கலம், பெரியார்நகர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சுந்தரம் (65). பேட்டை பகுதியில் ஒரு வீட்டில் வேலை செய்துவிட்டு அந்த வீட்டில் இருந்த தொட்டி தண்ணீரில் குளிக்கச் சொன்ன போது குளத்தில் குளிப்பதாக மாரியம்மன் கோயில் குளத்தில் குளிப்பதற்காக இறங்கியவர் கைலி சட்டைகளை துவைத்து காயப்போட முள்வேலியில் கைவைத்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரை மீட்க பலர் போராடியும் முடியவில்லை. அதன் பிறகே குமாரவேலும் மின்சாரம் தாக்கி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
இரவு நேரத்திலும் ஆட்கள் குளிப்பதால் குளத்தை சுற்றி தடுப்பு முள்வேலிக்கு இடையே மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தது. அதில் மின்சார வயர் நசுங்கி மின்சாரம் முள்வேலியில் பரவி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக மின்மாற்றியில் மின்சாரம் நிறுத்தப்பட்டு இறந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு கீரமங்கலம் போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்