தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு முதல் இரண்டுகட்டமாக தேர்தல் நடந்து முடியும் வரை விதிமுறைகள் காற்றில் பறக்கவிட்டே நடந்துள்ளது.
தேர்தல் பணியில் கர்ப்பினிகள், பாலூட்டும் தாய்மார்கள், புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு தேர்தல்பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு இருந்தும் அந்த உத்தரவுகளை தேர்தல் நடத்தும் மாவட்ட அதிகாரிகள் கடைப்பிடிக்கவில்லை.

புதுக்கோட்டை மாவட்டத்தில் விலக்கு கேட்டு சுமார் 500 பேருக்கு மேல் விண்ணப்பித்தும் பலரது கோரிக்கைகளை ஏற்கவில்லை. அதனால் கர்ப்பினிகள், பாலூட்டும் தாய்மார்களும் பணிக்கு செல்ல உத்தரவுகள் வழங்கப்பட்டிருந்தது.
இது ஒரு பக்கம் என்றால் மற்றொரு பக்கம் வாக்குச்சாவடிகளுக்கு பணியமர்த்தப்பட்டவர்கள் தவிர ஒவ்வொரு ஒன்றியத்திலும் ரிசர்வு பணி என்ற பெயரில் அவசரத்திற்காக காத்திருப்பு பணியில் சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் வைக்கப்படுவார்கள். அடிப்படை வசதி உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு மாலை வாக்குப் பதிவு முடிந்த பிறகு அனைவருக்கும் மதிப்பூதியம் வழங்கி அனுப்பி வைக்கப்படுவார்கள்.

ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த விதிமுறைகளும் பின்பற்றப்பட்டதாக தெரியவில்லை..
27 ந் தேதி வாக்குப் பதிவு நடந்த போது குண்றாண்டார்கோயில் ஒன்றியத்தில் காத்திருப்பு பணியில் ஈடுபட்டிருந்த 60 பேருக்கு மதிப்பூதியம் வழங்க மறுத்ததாக சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பிறகு மாவட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து மதிப்பூதியம் வழக்கினார்கள். மறுபடியும் இப்படி நடக்க கூடாது என்று மாவட்ட அதிகாரிகள் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் தான் இன்று 30 ந் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 ஒன்றியங்களில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடந்தது. இதில் ஆவுடையார்கோயில் ஒன்றியத்தில் 158 பேர் காத்திருப்பு பணியில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த பணியில் தேர்தல் ஆணைய உத்தரை மீறி கர்ப்பினிகள், பாலூட்டும் தாய்மார்கள் பலர் இருந்தனர் 50 க்கும் மேற்பட்ட பெண்களும் காத்திருந்தனர். அடிப்படை வசதிகள் இல்லை என்று அருகில் உள்ள கடைகளுக்கு சென்றுவிட்டு வந்து காத்திருந்தனர்.

மாலை ஆனதும் மதிப்பூதியம் வாங்கிக் கொண்டு 50, 60 கி மீ சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராக இருந்தனர். ஆனால் மாலையில் வந்த அதிகாரிகள் மதிப்பூதியம் இல்லை என்று சொல்ல வாக்குவாதம் ஏற்பட்டு மதிப்பூதியம் கொடுக்காமல் சென்றுவிட காத்திருந்த 158 பேரும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் அறிந்து வந்த அறந்தாங்கி டிஎஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடச் செய்தனர். சாலை மறியல் கைவிட்டாலும் அனைவரும் கொட்டும் பனியில் கடும் குளிரில் கர்ப்பினிகள், பாலூட்டும் தாய்மார்கள் என அனைவரும் காத்திருந்தனர். சுமார் 3 மணி நேரம் காத்திருப்பிற்கு பிறகு வந்த அறந்தாங்கி கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி அனைவருக்கும் மதிப்பூதியம் வழங்க நடவடிக்கை எடுத்த பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கூறும் போது.. தேர்தல் ஆணையத்தில் விதிகளை பின்பற்றாமல் பணிசெய்ய உத்தரவுகள் கொடுத்தனர். கைக்குழந்தைகள் இருப்பது பற்றி விலக்கு கேட்டும் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இப்ப இவ்வளவு நேரம் காத்திருக்க வைத்து மதிப்பூதியம் இல்லை என்கிறார்கள். இதனால் நாங்கள் வாக்கு எண்ணும் மையப் பணிகள் அதற்கான பயிற்சிகளை புறக்கணிப்போம் என்று முடிவெடுத்த பிறகு பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளார்கள். தொடர்ந்து இப்படி பாதிக்கப்படுகிறோம். மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என்றனர்.
தேர்தல் பணிக்கே இப்படின்னா வாக்கு எண்ணும் பணிக்கு என்ன செய்யப் போகிறார்களோ?