தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, சேலம் சரகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை தனி நபர்கள் வைத்திருந்த 3,712 துப்பாக்கிகள் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் காலங்களில், தனி நபர்களுக்கு உரிமத்துடன் வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகள், காவல்துறை வசம் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என்பது நடைமுறை. தேர்தல் முடிந்த பிறகு தங்களது துப்பாக்கி மற்றும் தோட்டாக்களைப் பெற்றுக்கொள்ளலாம். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு துப்பாக்கிகள், தோட்டாக்கள் காவல்துறையால் பெறப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை புறநகர் பகுதிகளில் 1,400 பேருக்கும், மாநகர பகுதிகளில் 1,912 பேருக்கும் சொந்த பாதுகாப்புக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தங்களிடம் உள்ள துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என்று ஏற்கனவே காவல்துறை தரப்பில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து, சேலம் மாவட்டத்தில் இதுவரை 1,892 பேர், அவரவர் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர். எஞ்சியுள்ள 20 பேரும் உடனடியாக துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் பெற்ற 900 பேரும், காவல்துறை வசம் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் 400 பேருக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் துப்பாக்கிகளை ஒப்படைத்துவிட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிமம் பெற்றுள்ள 520 பேரும் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் சரகத்தில் இதுவரை 3,712 பேர் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர். இன்னும் 20 பேர் மட்டுமே துப்பாகிகளை ஒப்படைக்காமல் உள்ளனர். உரிய கால அவகாசத்திற்குப் பிறகும் துப்பாக்கிகளை ஒப்படைக்காத நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.