புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதில் உள்ளது மங்களநாடு வடக்கு சத்தியா நகர். சுமார் 60 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் பல ஆண்டுகளாக சாலை வசதி, குடிநீர், மின்வசதி இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். கஜாபுயலில் குடிநீர் தேக்கத் தொட்டிகள் பழுதடைந்து குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் புயல் பாதிப்பின் போது எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்வையிட வந்த போது சாலைகளை, குடிநீர் தொட்டிகளை சரி செய்து தருவது போல் நாடகமாடிய அரசு அதிகாரிகள் அதன் பிறகு அந்த பகுதிக்கே வரவில்லை என்றும் அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். எனவே தங்கள் பகுதி் மக்கள் சென்று வர முறையான தார்ச்சாலை, குடிநீர் வசதி, மின் வசதி, தெருவிளக்கு, மயானச் சாலை போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர்கள், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றித் தரும் வரை தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர். மேலும் கோரிக்கைகளை ஏற்காத நிலையில் ஓட்டு கேட்கவும் யாரும் வரவேண்டாம் என்றனர் அந்த கிராம மக்கள்.
அதேபோல தஞ்சாவூர் தொகுதியில் உள்ள பேராவூரணி நீலகண்டபிள்ளையார் கோயில் நிலத்தில் குடியிருக்கும் பலருக்கும் மின் இணைப்பு வழங்கவில்லை என்பதால் பல ஆண்டுகளாக போராடிய மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
இதேபோல கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பல கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவுக்கு வந்துள்ளனர்