
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை விரைவில் தனது வாழ்க்கை குறித்த புத்தகத்தை வெளியிட போவதாக தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை பாஜகவில் சேர்ந்தது முதலே அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அவரது கல்வி தகுதி குறித்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிற நிலையில் அதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள அண்ணாமலை, முறைப்படி கடந்த 2010ஆம் ஆண்டு குடிமைப் பணித் தேர்வில் தேர்வானதாகவும், அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் ஆட்சியில் இருந்தது என்றும் கூறியுள்ளார்.
குடிமைப் பணித் தேர்வில் தேர்வானது மட்டுமின்றி ஐ.பி.எஸ் பயிற்சியில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், அரசியல் கட்சிகளின் சிபாரிசு இல்லாமல் சொந்த முயற்சியில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பதவி ஏற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் அரசில் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் பணியாற்றியதாகவும் பாரதிய ஜனதாவுடன் வெறும் நான்கு நாட்கள் மட்டுமே பணியாற்றியதாக கூறியுள்ள அண்ணாமலை மேலும் தனது வாழ்க்கை குறித்த புத்தகத்தை விரைவில் வெளியிடப் போவதாகவும் அந்த ட்விட்டர் பதிவில் அறிவித்துள்ளார்.