சாலை திட்டங்களுக்காக நிலங்களை கையகப்படுத்துவதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. பொதுமக்களே சாலைப்பணிகளுக்காக நிலங்களை மனம் உவந்து கொடுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்திற்கு ஜூலை 20ம் தேதி இரவு வந்தார்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் - சின்னப்பம்பட்டி இடையே 24.10 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள புதிய புறவழிச்சாலை துவக்க விழா, ஜூலை 21ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, சாலையை போக்குவரத்து பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:
தொழில்வளம் சிறக்க சாலை உள்கட்டமைப்பு வசதிகள் மிகவும் முக்கியமானது. அந்த வகையில், நாட்டிலேயே சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டு தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இன்று 3.11 கி.மீ. தூரத்திற்கு புறவழிச்சாலை திறந்து வைக்கப்பட்டு உள்ளது.
ஓமலூர் - மேட்டூர் ரயில் தடத்தில் ரயில்கள் செல்லும்போது வாகனங்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டுதான் தொளசம்பட்டியில் 18.44 கோடி ரூபாய், முத்துநாயக்கன்பட்டியில் 15.94 கோடி ரூபாய், ஜிண்டால் ஆலை அருகில் 19.34 கோடி ரூபாய், குஞ்சாண்டியூரில் ஒரு மேம்பாலம் என நான்கு ரயில்வே மேம்பாலங்கள் விரைவில் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வரும்.
திருச்செங்கோடு - சங்ககிரி, கொங்கணாபுரம் - தாரமங்கலம் சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. ஓமலூர் - மேச்சேரி இடையே 14.6 கி.மீ. தூரம் நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படும். மேட்டூர் - தொப்பூர் சாலையும் விரிவாக்கம் செய்யப்படும்.
சாலை உள்கட்டமைப்பு என்பது மிகவும் முக்கியம். ஆனால், இத்திட்டங்களுக்காக நிலங்களை கையகப்படுத்துவதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. பொதுமக்கள் மனம் உவந்து கொடுத்தால்தான் சாலைகள் அமைக்க முடியும். தரமான சாலைகள் இருந்தால்தான் விபத்து, உயிரிழப்புகளைக் குறைக்க முடியும். போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலையை உருவாக்குவதே எங்கள் லட்சியம்.
சேலத்தில் விரைவில் ராணுவ தளவாட உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உருவாக்கப்பட உள்ளது. இதற்காக ஸ்டீல் பிளாண்டில் நிலம் ஒதுக்க மத்திய அரசிடம் கோரப்பட்டு உள்ளது. இந்தத் தொழிற்சாலை அமைந்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
நீர் மேலாண்மைத் திட்டம் முக்கியம். குடிமராமத்து திட்டத்தை விவசாய சங்கங்களின் பங்களிப்புடன் நிறைவேற்றி வருகிறோம்.
பனமரத்துப்பட்டியில் அரளிப்பூ, ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலவகையான பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதனை பெங்களூருவுக்கு கொண்டு சென்று விற்பதால் உரிய விலை கிடைப்பதில்லை. இதற்காக ஓசூரில் சர்வதேச மலர் ஏல மையம் அமைக்கப்பட உள்ளது. இதில் குளிர்பதன கிடங்கு, விவசாயிகளும், வியாபாரிகளும் தங்குவதற்கான வசதிகள் செய்யப்படும்.
ஒரு ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க 100 சதவீதம் மானியமும், அதற்கு மேல் வைத்துள்ளவர்களுக்கு 75 சதவீத மானியமும் வழங்கி வருகிறோம். விவசாயத்திற்கு இந்த முன்னுரிமை அளித்து செயல்படுகிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.