அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார். பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்களைத் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்ததாகத் தேனியைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதற்கிடையே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று இபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டதோடு, புகார் தொடர்பாக எந்த ஒரு பெரிய நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டாம் எனவும் உத்தரவிட்டு வழக்கைத் தள்ளி வைத்தது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் நீதிமன்ற உத்தரவை மீறி சேலத்தில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் தன்னுடைய கணக்கின் விவரங்களை காவல்துறை கேட்டுப் பெற்றுள்ளதாகவும் மேலும், தான் படித்த ஈரோட்டில் உள்ள கல்லூரிக்கும் தன்னைப் பற்றி கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறியுள்ளார். நீதிமன்றம் இந்த வழக்கைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று கூறிய நிலையில் அதனை மீறிச் செயல்பட்டுள்ளதாகச் சேலம் மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் புஷ்ப ராணி, உதவி ஆய்வாளர் இருவருக்கும் எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற, ஜூலை 7 ஆம் தேதிக்குள் இரண்டு போலீசாரும் பதிலளிக்க வேண்டும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்துள்ளது.