கள்ளக்குறிச்சி நகரப் பகுதியான ஏழாவது வார்டில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்ந்து வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், இதனைப் பலர் வாங்கி குடித்ததாகவும் கூறப்படுகிறது. முதலில் 4 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 35 ஆக உயர்ந்துள்ளது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் ஜிப்மர் மருத்துவமனை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் என பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்புக்கு பாக்கெட் கள்ளச்சாராயம் காரணமாக இருக்கலாம் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இறந்தவர்களின் உடல்கள் உடற்கூராய்வு செய்யப்பட்ட பிறகே முழுமையான காரணம் தெரிய வரும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேநேரம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி செல்லவிருப்பதாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ள செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன். இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூடும் நிலையில், மரபுப்படி மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் உட்பட பலருக்கு இரங்கல் தீர்மானம் வாசித்து நிறைவேற்றப்படும். மறைந்தோர்க்கு அ.தி.மு.க சார்பில் இரங்கலைப் பதிவுசெய்கிறேன்.
ஆனால், இச்சூழலில், திமுக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்வியாலும், மெத்தனப் போக்காலும் பரிதாபமாக உயிரிழந்தோரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து அவர்களின் சொல்லொண்ணா துயரில் பங்குகொள்வதே பிரதானமாக அமைகிறது. மேலும் இறப்புக்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இறந்தவர்கள் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தாரையும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் சந்திக்க தற்போது கள்ளக்குறிச்சி விரைகிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.