கடலூர் கிழக்கு மாவட்ட சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் கழக அமைப்புத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு கழக நிர்வாகிகளுக்குத் தீர்மானம் பதிவேட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அதிமுக சிதம்பரம் நகர செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் கலந்துகொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு கழக கிளைச் செயலாளர்களுக்கு தீர்மான பதிவேட்டை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், ''அதிமுக உள்ளாட்சியில் நேர்மையாக தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் திமுக குறுக்கு வழியில் தேர்தலை சந்தித்தது. சட்டமன்ற தேர்தலில் அதிமுகவினர் சரியாக வேலை செய்திருந்தால் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர். கட்சியின் கோஷ்டி பூசலால் 3 சதவீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை இழந்துள்ளோம்.
வரும் 23-ந்தேதி பொதுக்குழு நடைபெறுகிறது. அதில் ஒற்றை தலைமையில் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்று வரும் 2026-ஆம் ஆண்டில் தமிழக முதல்வராகப் பதவியேற்பார். வரும் 23-ந்தேதி பொதுக்குழுவுக்கு செல்லும் உறுப்பினர்கள் தனி வாகனத்தில் செல்லக்கூடாது. பொதுவான ஒரே வாகனத்தில் செல்ல வேண்டும். ஒற்றைத் தலைமையில் கண்டிப்பாக இபிஎஸ் வெற்றிபெறுவார்'' என பேசினார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் அவைத் தலைவர் எம்எஸ்என் குமார், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், முன்னாள் எம்எல்ஏ அருள் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.