மக்களவை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி நிறுத்தியுள்ள எல்லா வேட்பாளர்களையும் மக்கள் தோற்கடிப்பார்கள் என்று சேலத்தில் அமமுக வேட்பாளர் எஸ்.கே.செல்வம் கூறினார்.
மக்களவை தேர்தலையொட்டி, கடந்த 19ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மார்ச் 26ம் தேதியுடன் (செவ்வாய்க்கிழமை) வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. அமமுக தரப்பில், குக்கர் சின்னம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்த நிலையில், அக்கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்து விட்டது. அமமுக பதிவு செய்யப்படாத கட்சியாக இருந்தாலும், இடைக்காலமாக அக்கட்சிக்கு ஏதாவது ஒரு பொது சின்னம் ஒதுக்கலாம் என உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கில் முடிவு தெரியாததால், தமிழகம் முழுவதும் அமமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யாமல் காத்திருந்தனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, அனைத்து தொகுதிகளிலும் அமமுக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.
சேலம் மக்களவை தொகுதியில் அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.செல்வம் போட்டியிடுகிறார். அவர் பகல் 2 மணிக்கு மேல், சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரியான ரோகிணியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
ஊடகங்கள்தான் சேலம் மாவட்டத்தை எடப்பாடி பழனிசாமியின் மாவட்டம் என்கின்றன. ஆனால், நாங்கள்தான் இந்த மண்ணின் உண்மையான மைந்தர்கள். மத்தியில் உள்ள பாஜகவையும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி நிறுத்தியுள்ள வேட்பாளர்களையும் தோற்கடிக்க வாக்காளர்கள் தயாராகி விட்டனர். இன்றைக்கு யார் ஜெயிக்க வேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். ஏற்கனவே திமுக என்பது முடிந்து போன கதை.
இந்த தேர்தலில் அமமுக வேட்பாளர்கள்தான் எல்லா இடங்களிலும் வெற்றி பெறுவார்கள். சேலம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் எடப்பாடி தரப்பினர் தேர்தல் விதிகளை மீறியுள்ளனர். அவர்கள் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம். நான் வெற்றி பெற்றால், சேலம் தொகுதி மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவேன். இவ்வாறு எஸ்.கே.செல்வம் கூறினார்.
முன்னதாக, அமமுக தொண்டர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், சேலம் கோட்டை பகுதியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையில் ஊர்வலமாக வந்தனர். தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக வேட்பாளருடன் நான்கு பேர் மட்டுமே மனு தாக்கல் செய்யும் இடத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும், எஸ்.கே.செல்வத்தின் மனைவி ராதாவும் சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.