தமிழக முன்னாள் முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, தஞ்சை மாவட்டம், பாபநாசம், ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சி விமான நிலையம் வந்திருந்தார். அப்போது திருச்சி அதிமுக ஒருங்கிணைந்த மாவட்ட கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பில், தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்பி ப.குமார், திருச்சி வடக்கு மாவட்ட கழகம் சார்பில், வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்சோதி, திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் அதிமுக பொதுச் செயலாளருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டி.ரத்தினவேல், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, சிவபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் திருச்சி மாவட்ட அவைத்தலைவர் ஐயப்பன், முன்னாள் அரசு கொறடா மனோகரன், திருச்சி மாவட்ட துணைச் செயலாளர் வனிதா, சிறுபான்மையினர் நலப் பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், பகுதி செயலாளர்கள், அன்பழகன், பூபதி, சுரேஷ் குப்தா, கலைவாணன், எம்.ஆர்.ஆர் முஸ்தபா, இப்ராம்ஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். எடப்பாடி பழனிச்சாமிக்கு, மேளதாளங்கள் முழங்க, பூங்கொத்துகள் வழங்கி கழக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் சிறிது ஓய்வுக்கு பின் எடப்பாடி பழனிசாமி தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒரத்தநாடு பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக புறப்படுகிறார் அவருக்கு வழிநெடுகிலும் அந்தந்த பகுதி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர் தொடர்ந்து இன்று மாலை ஒரத்தநாடு பகுதியில் மிகப் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், "தமிழகத்தில் கள்ளச்சாராயம் பெருகி உள்ளது என்று சட்டசபை காவல்துறை மானிய கோரிக்கையை நான் பேசி உள்ளேன். விழுப்புரத்தில் கள்ள சாராயம் குடித்தும் செங்கல்பட்டில் போலி மதுபானம் குடித்தும் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது. திறமையற்ற ஒரு பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆள்வதால் இப்படிப்பட்ட கொடுமை எல்லாம் நடைபெறுகிறது.
தமிழக டிஜிபி கஞ்சா விற்பனை தடுக்க 2.0, 4.0 என்று மட்டும் தான் சொல்கிறார். காவல்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதில்லை. முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள் தலையீடு காரணமாக தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. அவர் பதவியேற்ற நாளில் இருந்து தமிழகம் முழுவதும் கொலை கொள்ளை திருட்டு கஞ்சா விற்பனை கள்ளச்சாராயம் விற்பனை என்று அமோகமாக நடைபெற்று வருகிறது. மரக்காணத்தில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாக பத்திரிகையில் வந்த செய்திகளை அரசு கண்டுகொள்ளவில்லை. இதற்கு முழு பொறுப்பேற்று தமிழகத்தை ஆளும் மு.க. ஸ்டாலின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" என்றார்.