'மலைகளின் அரசன்', ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் இன்று 43வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி இன்று (மே 12, 2018) தொடங்கியது. இந்த மலர்க்கண்காட்சியை முதலமைச்சர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
கோடை விழாவையொட்டி 24 ஆயிரம் கார்னேசன் மலர்கள், பல வண்ண ரோஜாக்கள் உள்பட ஒரு லட்சம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தமிழ்நாடு தலைமைச் செயலக அமைப்பு, சேலத்தில் இருந்து விமான சேவை தொடங்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் மலர்களால் அமைக்கப்பட்ட விமான வடிவம், உழவர்களுக்கு அரசு வழங்கும் சேவையைக் குறிக்கும் வகையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட டிராக்டர், குழந்தைகளைக் கவரும் மோட்டு, பட்லு வடிவங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
கார்னேசன், ஆந்தூரியம், ஜெர்பிரா, மேரிகோல்டு, ஸ்பேத்திபில்லம், கோழிக்கொண்டை, ஜினியா, பீஸ்லில்லி, சால்வியா, பெகோனியா உள்ளிட்ட 10 ஆயிரம் அரிய வகை, கண்களை கவரும் மலர்த்தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இந்தக் கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி வரும் 16ம் தேதி வரை 5 நாள்கள் நடக்கிறது.
வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வனத்துறை மற்றும் பலதுறைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சாதனை விளக்க அரங்குகள், மலர்களால் ஆன வடிவங்களை முதலமைச்சர் பார்வையிட்டார். தொடக்க விழாவையொட்டி மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனம், கால் கோலாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் கதகளி நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் ஏற்காட்டில் இதமான சூழல் நிலவுகிறது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் பெங்களூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர்.
இந்த விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வெல்லமண்டி நடராஜன், துரைக்கண்ணு, எம்பிக்கள் பன்னீர்செல்வம், காமராஜ், சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி மற்றும் எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.