Skip to main content

இரண்டு கைகளை இழந்த வாலிபருக்கு  வேலைவாய்ப்பு வழங்கிய எடப்பாடி அரசு!

Published on 05/02/2019 | Edited on 05/02/2019
nr

    

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம், போடிக்காமன்வாடியைச் சேர்ந்த இராமசாமி நாயக்கர். இவர் தனது மனைவி வசந்தா, மகன் நாராயணசாமி(30), மகள்கள் செல்வி, வனிதா, நல்லம்மாள் உடன் வசித்து வந்தார். நாராயணசாமி 10ம் வகுப்பு படித்த முடித்த உடன் தொடர்ந்து படிக்க வசதி இல்லாததால் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். 

 

கடந்த 2015ம் வருடம் அக்டோபர் மாதம் 8ம் தேதி சித்தையன்கோட்டையில் கட்டிட வேலைக்கு சென்ற போது, சாரம் கட்டும்போது எதிர்பாராத விதமாக உயர்அழுத்த மின்கம்பியில் சாரக்கம்பி பட்டு அவருடைய இரண்டு கைகளும் கருகிவிட்டன. உடனடியாக திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அவர்கள் ரூ.1லட்சத்து 70ஆயிரம் வரை செலவு செய்து கைகள் சரியாகவில்லை. உடனடியாக கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றபோது, நாராயணசாமியின் இரண்டு கைகளையும் எடுத்தால்தான் உயிர்பிழைக்க முடியும் என அவர்கள் கூறி உள்ளனர். உடனடியாக நாராயணசாமியின் இரண்டு கைகளும் அகற்றப்பட்டன. அதன்பின்னர் வாழ்வாதாரம் இழந்த அந்த குடும்பம் மிகுந்த வறுமையில் வாடியது. இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட நாராயணசாமி மன வருத்தத்தில் இருந்துள்ளார். அப்போது ஒரு சிலர் மாவட்ட ஆட்சியரிடம் சென்று மனு நீதி நாளில் மனு கொடுக்க கூறி உள்ளனர்.

 

n

 

இரண்டு கைகளையும் இழந்த நாராயணசாமி மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் அவர்களிடம் தனது குடும்பத்தின் வறுமையை கூறியுள்ளார். மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் நாராயணசாமி மீது இரக்கம் கொண்டு உடனடியாக மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை ரூ.1500ஐ மாதந்தோறும் வழங்க உத்தரவிட்டார். அதன்பின்னர் நாராயணசாமி தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் தனது வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என கண்ணீர் மல்க கூறி உள்ளார். மாவட்ட ஆட்சியர் அவர் மீது இரக்கம் கொண்டு கைஒட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை (பிளாஸ்டிக் சர்ஜரி)க்கு தன்னால் முடிந்த உதவி செய்கிறேன் என்று கூறியுள்ளார். தனியார் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.18 லட்சம் வரை கேட்டுள்ளனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் வீட்டின் ஒரே மகனான நாராயணசாமியின் ஏழ்மையை கருத்தில் கொண்டும், அவரின் உடன்பிறந்த சகோதரிகள் மூவரின் நிலைமையை கண்டு உடனடியாக பசுமை வீடு கட்ட ஆணை வழங்கி உள்ளார். 

 


அதிகாரிகளும் பசுமை வீடுகளுக்கு தேவையான உதவிகளையும் வழங்கி உள்ளனர். இந்நிலையில் சென்னையில் ஸ்டான்லி மருத்துவமனையில் கைஒட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதை கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர் உடனடியாக நாராயணசாமிக்கு கை ஒட்டு மாற்றுச்சிகிச்சைக்கு சிபாரிசு செய்தார். டாக்டர் ரமாதேவி குழுவினர் வெற்றிகரமாக நாராயணசாமிக்கு கைஒட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தனர். இந்தியாவிலேயே முதன் முறையாக இந்த அறுவை சிகிச்சை செய்து ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவக்குழுவினர் சாதனை படைத்தனர். 

 

n


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  இரண்டு கைகளையும் இழந்து மீண்டும் பெற்ற நாராயணசாமியின் வாழ்க்கையில் ஒளியேற்றும் வண்ணம் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையின் வார்டு மேலாளர் பணி நியமனத்திற்கான ஆணையினை வழங்கி அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இச்செய்தி காட்டுத்தீ போல் பரவி போடிக்காமன்வாடியைச் சேர்ந்த அனைவரும் நாராயணசாமியின் இல்லம் தேடி வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு தமிழக அரசுக்கும் தங்களது நன்றியை தெரிவித்தனர். இதுகுறித்து, நாராயணசாமி கூறுகையில், போடிக்காமன்வாடியில் வசித்து வந்த என்னை உலக அளவில் தெரியப்படுத்தியது மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் அவர்களின் கருணை உள்ளம் தான் என்றார். தாய், தந்தை மற்றும் உடன்பிறந்த சகோதரிகள் மூவருடன் வசித்து வந்த நான் எந்த கவலையும் இல்லாமல் கட்டிட வேலைக்கு சென்று வந்தேன். 2015ம் வருடம் இரண்டு கைகளை இழந்த போது தற்கொலைக்கு சென்று விடலாம் என எண்ணியபோது, மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் அவர்களை சந்தித்தபின்புதான் நான் அந்த எண்ணத்தை விட்டுவிட்டேன். தொடர்ந்து அவர் எனக்கு மாற்றத்திறனாளி உதவித்தொகை, குடியிருக்க பசுமைவீடு வழங்கி எனது வாழ்க்கையில் முதல் தீபம் ஏற்றினார். அதன்பின்னர் அவரை அடிக்கடி சந்தித்தபோது கவலைப்படாதே, உனக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்கிறேன் எனக் கூறினார். சொன்னபடியே எனக்கு கைஒட்டுஉறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு சிபாரிசு செய்ததோடு, தமிழக முதல்வரின் கரத்தால் பணிநியமன ஆணையும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய்க்கும் எனது வாழ்நாள் முழுவதும் நன்றிகடனுடன் இருப்பேன். தொடர்ந்து என் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவேன் இது உறுதி என்றார். 

 


சென்னை ஸ்டான்லி மருத்துவ குழுவினர் ஆறு மாத காலத்திற்கு பயிற்சி(பிசியோதெரபி) எடுக்க சொல்லிஉள்ளனர். எனக்கு உதவும் மனப்பான்மை உள்ள அன்பு உள்ளங்கள் லேப்டாப் அல்லது கணினி வாங்கிக் கொடுத்தால் கம்ப்யூட்டர் சம்மந்தமான அனைத்து பணிகளையும் கற்றுக்கொண்டு எனது வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்வேன் என்றார். சிரித்த முகத்துடன் இருக்கும் நாராயணசாமி வாழ்க்கையில் இடையே சோகங்கள் ஏற்பட்டால் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் என்ற மனிதநேயரின் கருணை உள்ளத்தால் நாராயணசாமியின் வாழ்க்கை பிரகாசிக்க தொடங்கிவிட்டது. மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் அவர்களின் இந்த நடவடிக்கையை போடிக்காமன்வாடி கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் பாராட்டி உள்ளனர்!

சார்ந்த செய்திகள்