மறைந்த புதுக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமரன் நினைவு நாளான இன்று அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன். அதனைத் தொடர்ந்து திமுக கூட்டணி வேட்பாளர்கள், கந்தர்வகோட்டை சிபிஎம் சின்னத்துரை, ஆலங்குடி திமுக மெய்யநாதன், புதுக்கோட்டை திமுக முத்துராஜா, விராலிமலை பழனியப்பன் ஆகிய வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் செய்தார்.
ஆலங்குடி தொகுதி கீரமங்கலத்தில் திமுக வேட்பாளர் மெய்யநாதனுக்காக வாக்கு சேகரித்து பேசும்போது, “பெண்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று பேசுகிறார்கள் பெண்களை பாதுகாக்கும் சட்டங்களைக் கொண்டு வரவேண்டியவர்கள் அவர்கள் தான். ஆனால் நல்ல சட்டங்களைக் கொண்டு வராமல் வேளாண் சட்டங்கள் விவசாயிகளை, ஏழை மக்களைப் பாதிக்கும் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளனர். இதனை எடப்பாடியும் ஆதரிக்கிறார். இந்தச் சட்டத்தால் எத்தனை பாதிப்பு என்பதை உணராமல் நல்ல சட்டங்கள் என்று பச்சைத் துண்டை போட்டுக் கொண்டு பச்சையாகப் பொய் பேசிவருகிறார் எடப்பாடி. அதேபோல இன்று இலவசமாகப் பெற்றுவரும் மின்சாரத்திற்கு விலை வைக்கும் மின்சாரத் திருத்தச் சட்டம் கொண்டு வருவதையும் எடப்பாடி ஆதரிக்கிறார். நல்ல திட்டங்களை விட நாசகார திட்டங்களைத்தான் எடப்பாடி அரசு ஆதரிக்கிறது” என்று பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் கூறும்போது, “ஆளும்கட்சியினர் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்கள், அதற்கு அதிகாரிகளும் துணை போகிறார்கள். வால்பாறையில் நகராட்சி அதிகாரியின் காரில் பணம் கொண்டு செல்வதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது. கருத்துக் கணிப்புகளும் அவர்களுக்குப் பாதகமாக வருவதால் தி.மு.க.வை ஆட்சி அமைக்க விடமாட்டோம் என்று பா.ஜ.க தலைவர்கள் பேசுகிறார்கள். ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கூட்டணியை ஆட்சி அமைக்க விடமாட்டோம் என்று பேசுவது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. 20 தொகுதிகளிலும் பா.ஜ.க தோல்வியடையும் என்ற பயம் அவர்களிடம் தெரிகிறது. அதனால் தான் தாராபுரத்தில் பிரதமர் மோடி கூட்டணித் தலைவர்களுடன் கைகோர்க்காமல் கையை விரித்துவிட்டார். மக்கள் மதிப்பும் நம்பிக்கையும் வைத்துள்ள தேர்தல் ஆணையம் ஆளும் பாஜக - அ.தி.மு.க.வுக்கு இறையாகிவிடக்கூடாது. தேர்தல் ஆணையம் செயல் கேள்விக்குறியாகி விடக்கூடாது” என்று கூறினார்.