
அ.தி.மு.க. யாருக்கு சொந்தம் என்பதில் எடப்பாடிக்கும், பன்னீருக்குமான அதிகார மோதல் நடந்துக் கொண்டிருக்கிறது. இந்த மோதல் நாளுக்கு நாள் விரிவடைந்தபடி இருக்கிறது. இப்போதெல்லாம் எடப்பாடியும், பன்னீரும் வெளிப்படையாக ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்கிறார்கள். அந்தளவுக்கு அ.தி.மு.க.வில் கண்ணியம் காற்றில் பறந்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், அ.தி.மு.க.வின் பொன்விழா நிறைவு விழாவை அக்டோபர் 17- ஆம் தேதி தொடங்கி மூன்று வெவ்வேறு நாட்களில் கொண்டாடத் திட்டமிட்டுள்ளார் எடப்பாடி. இதற்கான ஏற்பாடுகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அக்டோபர் 20- ஆம் தேதி நாமக்கல்லில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி கலந்து கொள்கிறார்.
இதற்கிடையே, அ.தி.மு.க. பொன்விழா நிறைவு விழாவை பொதுக்கூட்டங்கள் நடத்தி விமர்சியாக கொண்டாட திட்டமிடப்பட்டிருக்கும் சூழலில், அதிமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகளாக இருக்கும் 1 லட்சத்து 16 ஆயிரம் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் எடப்பாடி. தன் கைப்பட எழுதி அவர் கையெழுத்திட்ட அந்த 3 பக்க அளவிலான கடிதத்தை தொண்டர்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் ரகசியமாக நடந்து வருகிறது.
அந்த கடிதத்தில், அ.தி.மு.க.வை துவக்கிய எம்ஜிஆரின் ஆளுமை, அவரது ஆட்சியின் திறமை, எம்.ஜி.ஆருக்கு பிறகு கட்சியைப் பாதுகாத்த ஜெயலலிதாவின் ஆளுமை, அவரது ஆட்சி மற்றும் அரசியல், ஜெயலலிதாவிற்கு பிறகு முதல்வரான தனது ஆட்சியின் ஆளுமை, அ.தி.மு.க.வை பாதுக்காக்க தான் பட்ட கஷ்டங்கள், ஓபிஎஸ்சின் துரோகங்கள் என பலவற்றையும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளாரம் எடப்பாடி!
மேலும், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் வியூகம், வெற்றி வாய்ப்பு குறித்தெல்லாம் தொண்டர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் கடிதத்தில் பதிவு செய்திருப்பதாகவும் அ.தி.மு.க. தரப்பிலிருந்து தகவல் கிடைக்கின்றன. எடப்பாடி பழனிசாமி எழுதி அனுப்பவிருக்கும். இந்த கடிதம் அ.தி.மு.க. தொண்டர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் எடப்பாடியின் ஆதரவாளர்கள்.