Skip to main content

எடப்பாடி தலைமையிலான டெங்கு ஆட்சி ஒழிய வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேட்டி

Published on 12/10/2017 | Edited on 12/10/2017
 எடப்பாடி தலைமையிலான டெங்கு ஆட்சி 
ஒழிய வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேட்டி


திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (12-10-2017) கொளத்தூர் தொகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சீனிவாசா நகரில் உள்ள லோகோ ஸ்கீம் 2வது தெருவில் குப்பைகள் தேங்கியிருந்ததை மு.க.ஸ்டாலின் கண்டதும், உடனடியாக தனது காரில் இருந்து இறங்கி அங்கிருந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். அதேபோல, ஜவகர் வீதி மற்றும் வில்லிவாக்கம் ரயில்வே இருப்புப்பாதை ஆகிய பகுதிகளில் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றும் பணிகளை, கழக தோழர்களுடன் இணைந்து  மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார். மேலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்களினால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம், அவர்களின் உடல்நலன் குறித்துக் கேட்டறிந்து, ஆறுதல் தெரிவித்தார்.
 
இதனையடுத்து,  மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:
 
ஸ்டாலின்: கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். வார்டு 69 க்கு உட்பட்ட திக்காகுளம் பகுதியில் உள்ள பாதாள சாக்கடையின் மூடி, விஷ வாயு அழுத்தம் காரணமாக, தூக்கி வீசப்பட்டதன் காரணமாக, அப்பகுதியில் ஏற்பட்டுள்ள சேதங்களை பார்வையிட்டேன். அதேபோல, கவுதமபுரம் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் பழுது பார்க்கும் பணிகளையும் நேரில் ஆய்வு செய்தேன். அதுமட்டுமல்ல, கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு உறுப்பினர் நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வார்டு எண் 68க்கு உட்பட்ட கோபாலபுரம் பகுதியில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளி மற்றும் வார்டு எண் 65க்கு உட்பட்ட சீனிவாசா நகரில் உள்ள சென்னை தொடக்கப் பள்ளி ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தினை நேரில் பார்வையிட்டு, பள்ளி மாணவ – மாணவியர் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்துள்ளேன். மேலும், வார்டு எண் 66க்கு உட்பட்ட பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன்.
 
டெங்கு காய்ச்சலால் ஏறக்குறைய 15,000 பேர் தமிழகத்தில் பாதிக்கப்பட்டு உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் டெங்கு பாதிப்பால் மாண்டு போயுள்ளனர். ஒரு நாளைக்கு 10 முதல் 20 பேர் டெங்கு காய்ச்சலால் இறந்து கொண்டிருப்பதாக ஊடகங்களின் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பிரதான எதிர் கட்சி என்றமுறையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், டெங்கு பாதிப்பை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைப்பது, அறிக்கை வெளியிடுவது, கண்டனம் தெரிவிப்பது என்ற அளவில் நிறுத்தி விடாமல், அந்தப் பணிகளில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் எல்லாம் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தி, அதன்படி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அப்படிப்பட்ட பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
 
அதேபோல, டெங்கு பாதிப்புகள் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்குவது உள்ளிட்ட பணிகளில் கழகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், டெங்கு நோய் எப்படி ஏற்படுகிறது, அதில் இருந்து பொதுமக்கள் தங்களை எப்படி தற்காத்துக் கொள்வது, டெங்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக என்ன செய்ய வேண்டும், டெங்கு பாதிப்பிலிருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது, அதிலிருந்து எப்படி மீள்வது ஆகிய விவரங்களை எல்லாம் பாதுகாப்பாக துண்டறிக்கைகள் மூலம் அச்சடித்து தொகுதி முழுவதும் வழங்கும் பணிகளும் நடைபெறுகிறது.
 
பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தக் கொடுமைகளுக்கு எல்லாம் முக்கிய காரணமாக அமைந்திருப்பது உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருப்பது தான். உள்ளாட்சித் தேர்தல் உரிய நேரத்தில், முறைப்படி நடந்திருந்தால் ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சி ஆகிய அமைப்புகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பொறுப்பேற்று இருந்திருப்பார்கள். அவர்கள் ஆங்காங்கே ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை அவ்வப்போது களைந்திருப்பார்கள். அதன் மூலம் டெங்கு காய்ச்சல் நிச்சயமாக கட்டுப்படுத்தப்பட்டு இருக்கும்.
 
ஆனால், இப்போது ‘குதிரை பேர’ ஆட்சி நடந்து கொண்டிருப்பதால், ஒருபக்கம் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் இருந்து கொண்டு, உயர் நீதிமன்றமே உத்திரவிட்டும், அந்தத் தீர்ப்பை மதிக்காமல், அதற்கு செவி சாய்க்காமல், உள்ளாட்சித் தேர்தலை இதுவரையிலும் நடத்தாமல், இன்னும் எப்படி தள்ளிப்போடுவது என்று முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் இன்றைக்கு நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் இந்தளவுக்குப் பரவி இருக்கிறது.
 
எனவே, டெங்கு காய்ச்சல் ஒழிய வேண்டுமென்றால் எடப்பாடி தலைமையில் இருக்கும் இந்த டெங்கு ஆட்சி முதலில் ஒழிய வேண்டும்.
 
செய்தியாளர்: டெங்கு காய்ச்சலில் இறந்தவர்கள் குறித்த விவரங்களை அமைச்சர் விஜயபாஸ்கரும், முதல்வரும் முரண்பாடாக வெளியிட்டு இருக்கிறார்களே?
 
ஸ்டாலின்: நீங்கள் சொன்னதுபோல, அவர்களுக்குள் ஒரு முரண்பாடு இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதுபற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. ஆனால், டெங்கு பாதிப்பை உடனே கட்டுப்படுத்த வேண்டும். பொதுமக்களின் உயிரை எல்லாம் காப்பாற்ற வேண்டும் என்பது தான் எங்களுடைய ஒரே கருத்து.
 
செய்தியாளர்: எதிர்க்கட்சித் தலைவர் தவறான குற்றச்சாட்டுகளை சொல்கிறார், ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கத் தயாரா என்று அமைச்சர் சரோஜா தெரிவித்து இருக்கிறாரே?

ஸ்டாலின்: அவர் ஒவ்வொரு ஊருக்கும், ஒவ்வொரு மருத்துவமனைக்கும் நேரில் வந்து பார்த்தால் போதிய ஆதாரங்கள் கிடைக்கும். தேவையெனில் நானும் தருவதற்குத் தயாராக இருக்கிறேன்.

சார்ந்த செய்திகள்